ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் லங்கா பிறீமியர் லீக் (எல் பி எல்) இருபது 20 கிரிக்கெட்டின் 3ஆவது அத்தியாயம் ஜூலை 31ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்களின் பங்குபற்றலுடனான எல் பி எல் சுற்றுப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கிலும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கிலும் நடைபெறும்.
5 அணிகள் பங்குபற்றும் லீக் போட்டிகள் கொழும்பிலும் இறுதிச் சுற்று ஹம்பாந்தோட்டையிலும் நடத்தப்படும்.
‘லங்கா பிறீமியர் லீக்கின் 3ஆவது அத்தியாயம் நடத்தப்படவுள்ளது அறிவிப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.
உலகளாவிய இருபது 20 லீக் போட்டிகளில் ஓர் இடத்தைப் பிடிப்பதற்கு ஒரு சிறந்த, வலிமையான போட்டியாக எல்பிஎல் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது’ என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.
லங்கா பிறீமியர் லீக்கில் மொத்தம் 24 போட்டிகள் நடத்தப்படும். சர்வதேச மற்றும் வெளிநாட்டு வீரர்களைப் பதிவு செய்யும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எல்பிஎல் அங்குரார்ப்பண அத்தியாயத்தில் திசர பெரேரா தலைமயிலான ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் சம்பியனானது.
இரண்டாவது அத்தியாயத்தில் மீண்டும் திசர பெரேரா தலைமையில் ஜெவ்னா கிங்ஸ் (ஸ்டாலியன்ஸின் புதிய பெயர்) சம்பியனாகி இருந்தது.