ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் அத்தியாயத்தில் விறுவிறுப்பைத் தோற்றுவிக்கும் வகையில் புதிய வியூகம் ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூலை 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ள லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ‘பவர் ப்ளாஸ்ட் ஓவர்ஸ்’ என்ற வியூகம் அறிமுகமாகிறது.
போட்டியில் உத்வேகத்தை அதிகரிக்கச் செய்து இரசிகர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தும் நோக்கில் 16ஆவது, 17ஆவது ஓவர்களில் ‘பவர் ப்ளாஸ்ட் ஓவர்ஸ்’ எனும் விசேட பவர் ப்ளே அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த இரண்டு ஒவர்கள் வீசப்படும்போது 30 யார் வட்டத்துக்கு வெளியே 4 வீரர்கள் மட்டுமே களத்தடுப்பில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.
ரி20 கிரிக்கெட் போட்டிகளில் வழமையாக பின்பற்றப்படும் முதல் 6 ஓவர் பவர் ப்ளேக்கு புறம்பாக இந்த விசேட பவர் ப்ளே அறிமுகப்படுத்தப்படுவதாக லங்கா பிறீமியர் லீக் 2024இன் போட்டி பணிப்பாளர் சமன்த தொடங்வெல கூறினார்.
போட்டியில் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தும் அதேவேளை இரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் நோக்கில் இந்தப் புதிய வியூகத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக்கில் முதல் 5 போட்டிகள் கண்டி பல்லேகலையிலும், அடுத்த 9 போட்டிகள் தம்புளையிலும் இறுதிச் சுற்று உட்பட 10 போட்டிகள் கொழும்பிலும் நடைபெறவுள்ளன.
இறுதிப் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஜூலை 21ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் ஜூலை 22ஆம் திகதி இருப்பு (ரிசேர்வ் டே) நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.