இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்துள்ள 18 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான றினோன் தலைவர் கிண்ண முதலாம் பிரிவு கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (06) பிற்பகல் நடைபெறவுள்ளன.
18 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியும் யாழ். மத்திய கல்லூரியும் மோதவுள்ளன.
இப் போட்டி சனிக்கிழமை (06) பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டியைத் தொடர்ந்து பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மருதானை புனித சூசையப்பர் கல்லூரியும் கொழும்பு ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியும் விளையாடவுள்ளன.
இதேவேளை, 1ஆம் பிரிவு, 2ஆம் பிரிவு சிறுவர்களுக்கான இறுதிப் போட்டிகளும் மற்றும் சிறுமிகளுக்கான இறுதிப் போட்டியும் இதே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெறவுள்ளன.
2ஆம் பிரிவு சிறுவர்களுக்கான இறுதிப் போட்டியில் களுத்துறை முஸ்லிம் வித்தியாலயத்தை கொழும்பு அல் ஹிக்மா கல்லூரி எதிர்த்தாடவுள்ளது.
சிறுமிகளுக்கான இறுதிப் போட்டியில் குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியை பொலன்னறுவை பெந்திவௌ மகா வித்தியாலயம் சந்திக்கிறது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தடைக்குட்பட்டுள்ள இக் காலப்பகுதியில் பாடசாலைகள் கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறுவது கால்பந்தாட்டப் பிரியர்களுக்கு பெரும் திருப்தியை கொடுப்பதாக அமைகிறது.
றினோன் தலைவர் கிண்ணத்திற்காக நடைபெறும் இப் போட்டிகளுக்கு றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகம் பூரண அனுசரணை வழங்குகின்றது.
றினோன் கால்பந்தாட்ட பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் நிருவாகிகளின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது என பாடசாலை அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பெற்றோர் தெரிவித்தனர்.