அந்தமான் கடற்பரப்பில் ரோகிங்யா அகதிகளின் படகு காணாமல்போயுள்ளதை தொடர்ந்து 180க்கும் அதிகமான அகதிகள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 2 ம் திகதி பங்களாதேசின் கொக்ஸ் பசாரிலிருந்து மலேசியா புறப்பட்ட அகதிகள் படகு குறித்து கவலைகொண்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை ஐநா தெரிவித்திருந்தது.
குறிப்பிட்ட படகில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஐநா தெரிவித்துள்ளது.
இந்த தகவல் உண்மையாகயிருந்தால் இந்த வருடம் ரோகிங்யா அகதிகள் கடலில் சந்தித்த மோசமான துயரம் இதுவாகும்.
இதேவேளை 200 பேருடன் மலேசியா செல்ல முயன்ற நிலையில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகொன்று இந்தோனேசியாவின் அசேயில் கரையொதுங்கியுள்ளது.
இது ஐநா காணாமல்போயுள்ளது என அறிவித்த படகில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசேயில் கரையொதுங்கிய படகின் பயணத்தின் போது 12 பேர் உயிரிழந்துவிட்டனர் என படகில் உள்ளவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட படகிலிருந்த பெண்ணொருவரின் ( ஐந்து வயது மகளுடன்) சகோதரரான முகமட் ரெஸ்வான் கான் கடந்த வாரம் படகின் தலைமை மாலுமியுடன் பல தடவை பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வாரகாலமாக நாங்கள் உணவு மருந்து இன்றி பயணிக்கின்றோம் இதுவரை 12 பேரை இழந்துவிட்டோம் என 24ம் திகதி தலைமை மாலுமி தெரிவித்தார் என முகமட் கான் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் கரையொதுங்கிய படகிலிருந்து மீட்கப்பட்டவர்களில் தனது சகோதரியும் பிள்ளையும் உள்ளதாக தெரியவந்துள்ளது உறுதியான தகவலிற்காக காத்திருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐநா தெரிவித்துள்ள காணாமல்போன படகில் உள்ளவர்களின் உறவினர்கள் 8 ம் திகதி தாங்கள் படகுடன் தொடர்பை இழந்துவிட்டதாகவும் அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மலேசியாவில் உள்ள தனது கணவருடன் இணைவதற்காக தனது சகோதரி ஆயேசா கட்டுன் தனது இரு பிள்ளைகள்( ஐந்து – மூன்று) உடன் எப்படி படகேறினார் என்பதை அவரதுசகோதரர் முகமட் நோமன் வர்ணித்துள்ளார்.
டிசம்பர் இரண்டாம் திகதி படகு பங்களாதேசிலிருந்து புறப்பட்ட தினத்திலிருந்து நாங்கள் அவர்களுடன் தொடர்பிலிருந்தோம்,ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை படகில் உள்ளவர்களின் செய்மதி தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டோம் எனஅவர்தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 8 ம் திகதிக்கு பின்னர் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது சகோதரி பிள்ளைகளுடன் பயணித்த படகு மூழ்கிவிட்டது என்பதை உணர்ந்த தருணம் பெருந்துயரில் சிக்குண்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனது தாயார் இரண்டு நாட்களாக உணவு உண்ணவில்லை,அவர் அழுது மயங்கிவிழுகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.