ரொஹிங்யர்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு மியன்மாரில் தொடர்ந்து செல்கிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் துணைப் பொதுச் செயலாளர் கிளிமோர் தெரிவித்தார்.
பௌத்த நாடான மியன்மார், சிறுபான்மையினரான ரொஹிங்யர்களை இனச் சுத்திகரிப்புச் செய்கிறது என்று குற்றம் சுமத்தப்படுகி றது. இதனால் மியன்மாருக்கு எதிராக உலகளவில் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி ரொஹிங்ய ஆயுதக் குழுவொன்று நடத்திய தாக்குதலில் மியன்மார் சிப்பாய்கள் உயிரிழந்ததை அடுத்து ரொஹிங்யர்கள் அதிகம் வதைபட்டார்கள். சுமார் 7 லட்சம் ரொஹிங்யர்கள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்களுக்கு உணவளித்து பராமரித்து வருகிறது பங்களாதேஷ். பங்களாதேஷில் இருந்து ரொஹிங்யர்களை அழைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என்று ஒருபுறம் தெரிவிக்கப்பட்டாலும் மறுபுறத்தில் ரொஹிங்யர்கள் மீதான தாக்குதல்கள் தொடரத்தான் செய்கின்றன.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் கிளிமோர், பங்களாதேஷில் அமைக்கப்பட்டிருக்கும் ரொஹிங்யர்கள் அகதிகள் முகாமை நேற்றுமுன்தினம் பார்வையிட்டார் இதையடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘‘மியன்மார் நாட்டில் ரொஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீவிரவாதம் என்ற பரப்புரை மூலமும் தேவையான உணவுப் பொருள்கள் கிடைக்காமலும் செய்யப்பட்டு ரொஹிங்ய முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மியன்மார் அரசு அகதிகளைத் திரும்ப அழைத்துக் கொள்வதாகக் கூறினாலும் ராணுவம் அவர்களை வெளியேற்றி வருகிறது. இப்போதுள்ள சூழலில் அகதிகள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப வாய்ப்பு இல்லை’’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.