கொல்கத்தாவில் நடந்த மூன்றாவதும் இறுதியுமான டி-20 போட்டியில் இந்திய அணி 73 ஓட்டங்களினால் டி-20 உலகக் கிண்ண ரன்னர்-அப்பான நியூசிலாந்தை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்த வெற்றியானது டி-20 போட்டிகளில் ரோஹித் ஷர்மா-ராகுல் டிராவிட் சகாப்தத்திற்கு சிறந்த தொடக்கத்தை வழங்கியுள்ளது.
அதேநேரம் டி-20 போட்டியில் ஓட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி வித்தியாசம் இதுவாகும்.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் அதிகபடியாக ரோகித் சர்மா 31 பந்துகளில் 56 ஓட்டங்களை எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக இஷான் கிஷன் 29 ஓட்டங்களையும், ஸ்ரேஸ் அய்யர் 25 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
188 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, 17.2 ஓவர்களில் 111 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரணடைந்தது.
மார்ட்டின் கப்தில் மாத்திரம் சொல்லும் அளவுக்கு 36 பந்துகளில் 51 ஓட்டங்களை எடுத்தார். ஏனைய வீரர்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தனிர்.
பந்து வீச்சில் அசத்திய அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளையும், தீபக் சஹர், சாஹல் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3:0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்திய அணியின் முழுநேர டி-20 தலைவராக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மாவுக்கும், தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ராகுல் டிராவிட்டுக்கும் இந்த வெற்றி நல்ல ஆரம்பத்தை வழங்கியுள்ளது.