தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு தமிழ் இயக்குனர்களும், நடிகர்களும் கூட தப்பவில்லை. இதுவரை வீடியோக்கள் மூலம், பேஸ்புக் பதிவு மூலம் குற்றம் சாட்டியவர். அடுத்த சினிமா மூலம் பரபரப்பு ஏற்படுத்த இருக்கிறார்.
அவரது வாழ்க்கை கதை ரெட்டி டயரி என்ற பெயரில் தயாராக இருக்கிறது. இதில் தனது கேரக்டரில் தானே நடிக்கிறார் ஸ்ரீரெட்டி. தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை அலாவுதீன் இயக்குகிறார். ரவிதேவன், சித்திரை செல்வன் இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் நடிப்பது பற்றி ஸ்ரீரெட்டி கூறியதாவது:
வாய்ப்பு தேடும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். எனக்கு அந்த அனுபவங்கள் ஏற்பட்டதை அம்பலப்படுத்தினேன். நடிகைகளுக்கு எதிரான பாலியல் பிரச்னைகளை மையப்படுத்தி ‘ரெட்டி டைரி’ தயாராகிறது. நல்லவர்களாக நடித்து சினிமாவில் மோசடி பேர்வழிகளாக வலம் வரும் மோசடி பேர்வழிகளை அம்பலப்படுத்துவோம். படத்தில் எனது வாழ்க்கை சம்பந்தமான காட்சிகள் உள்ளனவா?, உண்மை வீடியோ காட்சிகள் இருக்குமா? என்பதை இப்போது சொல்ல முடியாது.
ஆந்திராவில் எனக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு நடிக்க தடை போட்டார்கள். நடிகர் சங்க உறுப்பினர் அட்டையும் தரவில்லை. தேசிய மகளிர் ஆணையம் தலையிட்ட பிறகு தடையை நீக்கினார்கள். ஆனாலும் படங்களில் நடிக்க வாய்ப்பு தரவில்லை. அரசும் உதவவில்லை. எனவே ஆந்திராவைவிட்டு வெளியேறி சென்னையில் குடியேறிவிட்டேன். இங்குள்ளவர்கள் பெண்களை மதிப்பவர்கள். எனக்கு பிரச்சினைகள் ஏற்பட்டபோது சென்னையில் இருப்பவர்கள் ஆதரவு கொடுத்தார்கள். தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். என்றார் ஸ்ரீரெட்டி.