ரூ.2.3 கோடி மதிப்பிலான வீட்டை இலவசமாக வழங்கும் பிரித்தானிய கோடீஸ்வரர்: யார் அந்த அதிர்ஷ்டசாலி?
பிரித்தானிய கோடீஸ்வரர்களில் ஒருவரான மார்க்கோ ராபின்ஸன் தனது 120,000 பவுண்டு மதிப்பிலான வீடு ஒன்றை தகுந்த நபர் ஒருவருக்கு இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
கோடீஸ்வரர் மார்க்கோ ராபின்ஸன் புதுமையான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது.
48 வயதாகும் ராபின்ஸன், தனையார் ஊடகம் ஒன்றின் சார்பில் ஆவணப்படம் ஒன்றை தயாரிக்கவிருக்கிறார். அதன் பொருட்டு சமூகத்தில் எந்த உதவியும் பெற வாய்ப்புகள் இல்லாதவர்கள், ஆனால் சொந்தமாக ஒரு குடியிருப்பு வேண்டும் என தீவிரமாக முயன்று வருபவர்கள் ஆகியோர்களை கருத்தில்கொண்டு ஒரு நூதன திட்டமொன்றை ராபின்ஸன் மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்த ஆவணப்படத்தின் வாயிலாக அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு 120,000 பவுண்டு (இலங்கை மதிப்பில் ரூ.2,26,94,383) மதிப்பிலான வீடு ஒன்றை முற்றிலும் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளார். மட்டுமின்றி ஆதரவற்றவர்கள், கடை வைத்து நடத்தும் சிறு வணிகர்கள் உள்ளிட்டவர்களிடம் இந்த திட்டம் குறித்து ராபின்ஸன் பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் 30 வயதை தாண்டியும் பலர் தங்களது பெற்றோருடன் வாழ்ந்துவருவதாக கூறும் ராபின்ஸன், பலருக்கும் சொந்தமாக குயிருப்பு இல்லை என்பதை தாம் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட துறையில் தாம் அதிக பனம் ஈட்டியுள்ளதாக தெரிவித்த ராபின்ஸன், தற்போது அதன் ஒருபகுதியை பொதுமக்களுக்கு திருப்பித் தரும் கட்டத்தில் தான் வந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமது இந்த முடிவு எஞ்சிய கோடீஸ்வரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என நம்புவதாகவும், அவர்களும் இதேபோன்று தங்களால் இயன்றவரை இயலாதவர்களுக்கு உதவுவார்கள் எனவும் தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பிப்ரவரி 2ஆம் திகதிக்கு முன்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்த போட்டியில் பங்குபெற்று வீட்டை வெல்லலாம் என்று ராபின்ஸன் அறிவித்துள்ளார்.