பல மாதங்களாக, மருத்துவர்கள், மருந்தாளர்கள், மருந்து நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் பல அதிகாரிகள் உட்பட நாட்டின் சுகாதாரத் துறையின் பல்வேறு பங்குதாரர்கள், இலங்கையில் நிலவும் மிக மோசமான நிலைமையை குறித்து எச்சரித்தனர்.
அரசாங்கம் மீண்டும் மீண்டும் பற்றாக்குறையை மறுத்ததால், தற்போது வைத்தியசாலைகளில் பாரிய மருந்து மற்றும் மருத்துவ உபகரண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, கடுமையான அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடு தற்போது தலைவிரித்தாடியுள்ளது என்பது இரகசியமான விடயமல்ல.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவினால், நாட்டின் பொருளாதாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வால் சுகாதாரத் துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தன.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பெருமளவில் சரிந்ததன் விளைவாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மருந்தகங்களுக்கு மருந்து வழங்குவதை நிறுத்திவிட்டதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான மருந்து பொருட்கள் கடனின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டன.
எனவே, குறைந்த விலையில் இந்தப் பொருட்களை உள்ளூர் சந்தையில் விற்கும்போது உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் நாட்டில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு 25சதவீதத்திற்கும் அதிகமான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இது பாரிய ஆபத்தான நிகழ்வாக மாறும் எனவும் தெரிவித்தனர்.
தற்போது, பெரசிட்டமோல், பெனாடோல், பனடீன் போன்ற பிரபலமான மருந்துகளில் பெரும்பாலானவை பற்றாக்குறையாகவே காணப்படுகின்றன.
மேலும், நாட்டில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்டிபயாடிக் சிரப்புகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக, இன்சுலின் குப்பிகள், சில வகையான தடுப்பூசிகள், கண் சொட்டு மருந்துகள் மற்றும் சப்போசிட்டரிகள் போன்ற சில வகையான மருந்துகளை பொருத்தமான குறைந்த வெப்பநிலை வரம்பில் வைத்திருப்பதில் மருந்தகங்கள் சிக்கலை எதிர்கொள்கின்றன.
மேலும் பல மருந்தகங்கள் மின்பிறப்பாக்கியை கொண்டிருந்தாலும், அவற்றை இயக்குவதற்கு போதுமான எரிபொருளைப் பெற முடியவில்லை. என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதய நோய் , புற்றுநோய், நீரிழிவு நோயாளிகள் மற்றும் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் 237 அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நன்கொடையாளர்களுக்கு அரசாங்கம் அல்லது சுகாதார அமைச்சின் மீது நம்பிக்கை இல்லை என்பதால், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான வெளிப்படையான பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனவே, தேசிய மற்றும் சர்வதேச நன்கொடையாளர்களின் உதவிகளை ஒருங்கிணைக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒரு குழுவை நியமித்துள்ளது.
இதன்படி, நாட்டின் சுகாதார அமைப்புக்கு உதவ 1,000 க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் தங்கள் விருப்பத்தை அறிவித்துள்ளனர்.
மேலும், நன்கொடையாளர்கள், அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் பொறிமுறைகள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள ஒருங்கிணைப்புப் பொறுப்பு பாரட்டுக்குரியது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் காற்றோட்டத்திற்கான எண்டோட்ராஷியல் (Endotracheal)குழாய்கள் இல்லாததால், நாட்டில் உள்ள அனைத்து குழந்தை மருத்துவர்களும் இக்கட்டான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மிக விரைவில் அனைத்து மருத்துவமனைகளிலும் எண்டோட்ராஷியல் (Endotracheal) குழாய்களின் அனைத்து இருப்புகளும் தீர்ந்துவிடும் என்றும், பச்சிளம் குழந்தைகளை காற்றோட்டம் செய்வதற்கு எண்டோட்ராஷியல் குழாய்களை மீண்டும் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு வைத்தியசாலைகள் தள்ளிவிடப்பட்டுள்ளன எனவும் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கவலைக்குரிய விடயமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக, வைத்தியசாலை வலையமைப்பில் மருத்துவப் பொருட்கள் தீர்ந்துவிட்டன. எனவே, வைத்தியர்கள் நாட்டில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வென்டிலேட்டர் சர்க்யூட்களைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர். அசேல குணவர்தன, தடையற்ற சுகாதார சேவைகளை பேணுவதற்கும், இலங்கைக்கு மருந்து மற்றும் உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதற்கும் உத்தியோகபூர்வ இணைப்பாளர் ஒருவரை அண்மையில் நியமித்தார்.
இதற்கிடையில், மருந்துகளின் விலையை 20 சதவீதத்திற்கு அதிகரிக்க மருந்து இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]