விவசாயி அய்யநாதனுக்கு திருமணமாகி பல ஆண்டுகளுக்குப்பின், அவருடைய மனைவிக்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவ உதவிக்கு பணம் தேவைப்படுவதால், அருகில் இருக்கும் ஏ.டி.எம்.மில் சென்று பணம் எடுக்கிறார்.
ஏ.டி.எம்.மிஷினில் இருந்து பேனாவினால் எழுதப்பட்டிருந்த 2000 ரூபாய் நோட்டு வருகிறது. அந்த ரூபாய் நோட்டு செல்லாது என்று மருந்து கடைக்காரர் கூறி, மருந்து கொடுக்க மறுத்துவிடுகிறார். அய்யநாதனிடம் வேறு பணம் இல்லை. 2000 ரூபாயை மாற்ற முடியாத நிலையில், மருந்து கிடைக்காமல் குழந்தை இறந்துபோகிறது.
குழந்தையை இழந்த அய்யநாதன் கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார். இறுதியில் அய்யநாதனின் குழந்தை மரணத்திற்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.
நாம் அன்றாடம் கைகளில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டில் என்னென்ன சட்ட நுணுக்கங்கள் இருக்கின்றன, அது நமக்கு எப்படியெல்லாம் சாதகமாக இருக்கின்றன என்பதையெல்லாம் தன் திரைக்கதை மூலம் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ருத்ரன். நல்ல கதைக்களத்தோடு இறங்கியிருக்கும் இயக்குனர் ருத்ரன் கவனிக்க வைக்கிறார்.
பாரதி கிருஷ்ணகுமார் நிஜமாக வழக்குரைஞராக வந்து நீதிமன்றத்தில் வாதிடுவது கம்பீரம். பணத்தில் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து மக்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் பிரதிபலிக்கிறது என்பதைக் கூறும் காட்சி புதிது.
அரசு வழக்கறிஞராக வரும் கராத்தே வெங்கடேஷ் கச்சிதமான தேர்வு. விவசாயியாக அய்யநாதன், வழக்கறிஞர் அஜிதாவாக ஷர்னிகா உள்படம் பலரும் தேர்ந்த திரைக்கலைஞராக நடித்திருக்கிறார்கள். முற்றிலும் புதுமுகங்களே நடித்திருப்பதால், அவர்கள் அத்தனை பேரும் கதாபாத்திரங்களாகவே தெரிகிறார்கள்.
பெரிய கதாநாயகர்கள் நடித்திருந்தால் படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும். இடைவேளைக்குப்பின், வேகம் குறைகிறது. குறைகளை தாண்டி, அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டிய படம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
இனியவன் இசையையும் பிரிமூஸ் தாஸ் ஒளிப்பதிவையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘ரூபாய் 2000’ புது நோட்டு.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]