அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (16) ஆரம்பமான 1ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆரம்பத்தில் தடுமாறிய இங்கிலாந்து, ஜோ ரூட்டின் அபார சதத்தின் உதவியுடன் வலுவான நிலையை அடைந்தது.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 3ஆவது அத்தியாயத்தின் அங்குரார்ப்பண போட்டியாகவும் அமைந்த இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 8 விக்கெட்களை இழந்து 393 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.
நொட்டிங்ஹாமில் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கிதாரி ஒருவரால் 2 மாணவர்களும் அவர்களது பராமரிப்பாளரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடினர்.
முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. இடைவேளைக்கு முன்னர் 3 விக்கெட்களையும் இடைவேளைக்குப் பின்னர் 2 விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
பென் டக்கெட் (12), ஒலி போப் (31), ஸக் க்ரோவ்லி (61), ஹெரி புறூக் (32), அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் (1) ஆகியோரே ஆட்டமிழந்த ஐவராவர்.
இதனிடையே ஸ்க் க்ரோவ்லியும் ஒலி போப்பும் 2ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை ஓரளவு சீர் செய்தனர்.
தொடர்ந்து ஜோ ரூட், ஹெரி புறூக் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எனினும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் 2 விக்கெட்கள் சரிந்ததால் இங்கிலாந்து மீண்டும் தடுமாற்றத்துக்குள்ளானது.
இந் நிலையில் ஜோடி சேர்ந்த ஜோ ரூட், ஜொனி பெயாஸ்டோவ் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 121 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தை பலமான நிலையில் இட்டனர்.
ஜொனி பெயார்ஸ்டோவ் 78 பந்துகளில் 12 பவுண்டறிகளுடன் 78 ஓட்டங்களைப் பெற்றார்.
மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் 152 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 118 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.
ஓய்விலிருந்து திரும்பிவந்த மொயீன் அலி 18 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஒலி ரொபின்சன் 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி 3 பிடிகளை எடுத்ததுடன் 2 ஸ்டம்ப்களையும் செய்து பலத்த பாராட்டைப் பெற்றார்.
பந்துவீச்சில் நெதன் லயன் 149 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
டேவிட் வோர்னர் 8 ஓட்டங்களுடனும் உஸ்மான் கவாஜா 4 ஓடடங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.