ரியோ ஒலிம்பிக்கிற்கு இந்திய தடகள வீராங்கனை தகுதி: 36 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பெருமை!
பிரேசிலில் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக்கிற்கு இந்திய தடகள வீராங்கனை டுட்டி சந்த் தகுதி பெற்றுள்ளார்.
சர்வதேச தடகள போட்டிகள் கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி நகரில் நடக்கிறது.
இதில் 100 மீற்றர் ஓட்ட தகுதிச்சுற்றில் பங்கேற்ற இந்திய தடகள வீராங்கனை டுட்டி சந்த் 11.30 வினாடியில் இலக்கை எட்டினார்.
இதன் மூலம் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான 11.32 வினாடி என்ற இலக்கை முறியடித்து அசத்தினார்.
இது தவிர, ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ள 2வது இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் பி.டி.உஷா (1980ம் ஆண்டு) மட்டுமே இந்த பெருமையை பெற்றிருந்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பெடரேஷன் கிண்ண சாம்பியன்ஷிப்பில் 0.01 வினாடியில் டுட்டி ஒலிம்பிக்கில் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். தற்போது கடின முயற்சியால் ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்.