ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தமிழர் தாயகத்திலே ஆசிரியராக பணியாற்றிக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக கருத்தியல் ரீதியாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தனது படைப்புகள் மூலம் தமிழ் மக்களின் கண்ணீருக்கும் விடுதலைக்கும் நீதியும் நியாயமும் கேட்பதால் இவர் பல்வேறு அடக்குமுறைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறீலங்கா அரசின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தீபச்செல்வன் அவர்கள் நீண்ட நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். உண்மையில் இந்த விசாரணையின் பின்னணி என்ன என்பது குறித்து தீபச்செல்வனை உரிமை பத்திரிகை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறிய பதில்களை உலகம் முழுவதும் பரந்து வாழும் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கின்றோம்.
பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணை வலயத்தில் என்ன நடந்தது?
கடந்த 11ஆம் நாளன்று, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்திருந்தனர். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் 34 நாட்களில் நீந்திக்கடந்த நெருப்பாறு என்ற நாவலை கடந்த பெப்ரவரி 10ஆம் நாளன்று கிளிநொச்சியில் வெளியிட்டு வைத்தோம். அந்த நிகழ்வு வெளியீட்டை நடாத்தி தலைமை தாங்கியமைக்காகவே விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். குறித்த நூல் தமிழீழ விடுதலைப் புலிகளின் குடாரப்பு தரையிறக்கம் குறித்து எழுதப்பட்டது என்றும் அதில் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் பற்றிய கருத்துக்கள் உள்ளனவா என்று விசாரணையின் போது கேட்டார்கள்.
அத்துடன் நீங்கள் ஏன் வெளியீட்டு நிகழ்வை நடாத்திக் கொடுத்தீர்கள் என்றும் கேட்டார்கள். நா. யோகேந்திரநாதன், கிளிநொச்சியின் மூத்த எழுத்தாளர். தற்போது அவர் நோய்வாய்ப்பட்டு உடல் இயங்க முடியாத நிலையில் உள்ளார். அவர் எங்களை கேட்டதற்கு இணங்க, மூத்த எழுத்தாளரை அவரின் இறுதிக்காலத்தில் வாழும்போதே கௌரவிக்க வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்தோம் என்று பதில் அளித்தேன். சுமார் இரண்டறை மணிநேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடந்தது.
புலிகள் மீளுருவாக்கம் செய்யப்படுகிறார்கள் என இலங்கை அரசு உண்மையிலேயெ அஞ்சுகிறதா?
விசாரணை வாக்குமூலப் பதிவிற்கு வெளியிலும் பல விடயங்களை கேட்டார்கள். இந்த நாவல் புதிய தலைமுறைகளிடம் ஆயுதப் போராட்டத்தை தூண்டும் என்றார்கள். அத்துடன் சிலரை ஆயுதப் போராட்ட முயற்சிகளின்போது கைது செய்ததாகவும் சொன்னார்கள். 2009 முள்ளிவாய்க்காலில் தலைவர் பிரபாகரன் ஆயுதப் போராட்ட மௌனிப்பை அறிவித்த பிறகு அந்த வழியில் தமிழர்கள் ஒருபோதும் செல்ல மாட்டார்கள் என்று கூறினேன். அப்படி யாராவது செய்தால் அது தமிழ் மக்களுக்கு எதிரான சதிச் செயலாகவே இருக்கலாம் என்றும் கூறினேன்.
உங்கள் எழுத்துக்கள் குறித்து கேட்கவில்லையா?
எனது இலக்கிய படைப்புக்கள் குறித்து தாம் அறிந்துள்ளனர் என்றும் அவைகளை பற்றிக் கூறுமாறும் கேட்டார்கள். அந்த விபரங்களையும் தெரிவித்தேன். குறிப்பாக நடுகல், பயங்கரவாதி முதலிய நாவல்களை நான் எழுதியதும் சிங்கள மொழிகளில் என் இலக்கியங்கள் வெளிவந்ததும் தெரியும் என்றார்கள். தமிழ் மக்கள் பட்ட வலிகளையும் அவர்களின் ஏக்கங்களையும் நான் எழுதி வருகிறேன். சிங்கள மக்கள் அவற்றை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றும் கூறினேன்.
இந்த விசாரணை உங்களை எந்தளவுக்கு பாதித்தது?
விசாரணை என்னையும் எனது குடும்பத்தினரையும் பெரும் பதற்றத்திற்குள் தள்ளியதுதான். அதுவே அவர்களின் நோக்கமும்கூட. சில யூடியூப் ஊடகங்களின் அறிக்கையிடல்கள் என்னை இன்னமும் பதற்றப்படுத்தியது. இதனை வைத்து ஒருபோதும் அரசியலில் ஈடுபடுவதோ, வெளிநாட்டில் தஞ்சம் கோருவதோ என் நோக்கமல்ல. என் தாய்நிலத்தில் வாழ்வதும் எழுவதும்தான் என் வாழ்வின் இலட்சியம். அதற்காகவே நாம் இத்தனையும் கடந்து போராடுகிறோம். என் எழுத்தில் நிகழும் போராட்டமும் அதுதான்.
இந்தப் பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல என்ன செய்தீர்கள்?
இது படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திர மீறல். ஆக்க இலக்கியச் செயற்பாடுகள்மீதான அச்சுறுத்தல். இந்த விடயம், குறித்து ஐக்கிய நாடுகள் சபை ஆணையாளருக்கு எனது முறைப்பாட்டினை அளிக்க நண்பர்கள் ஏற்பாடு செய்கிறார்கள்.
நன்றி – உரிமை