விடாது கருப்பு என்பதுபோல நடிகை ராஷ்மிகா மந்தனா அவர் பேசிய சில வார்த்தைகளுக்காக தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். பேசும்போது என்ன பேசுகிறோம் என்பதை யோசிக்காமல் பேசினால் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதற்கு ராஷ்மிகாவை விட சிறந்த உதாரணம் இல்லை என்றே சொல்லலாம்..
கடந்த மாதம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணைந்து நடித்த டியர் காம்ரேட் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ராஷ்மிகா, “ நான் கன்னட நடிகை தான் என்றாலும் கன்னடத்தில் பேசி நடிப்பது தனக்கு சிரமமாக இருக்கிறது என்று வாய் தவறி சொல்லிவிட்டார். ஆனால் இவர் சொன்னதை கன்னடத்திரையுலகம் சீரியஸாகவே எடுத்துக்கொண்டது அப்போதிருந்து திரையுலகை சேர்ந்த சிலர் ராஷ்மிகாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சமீபத்தில் ஒரு கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கேஜிஎப் ஹீரோ யஷ், அந்த படத்தில் நடித்த கதாநாயகியையும் அவரது பேச்சையும் பாராட்டிப் பேசினார் அப்போது கன்னட மொழியிலிருந்து நடிகைகள் மற்றும் மொழிகளுக்கு சென்று புகழ் பெறும்போது தனக்கு மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் கூறினார் யஷ். அதேசமயம் மற்ற மொழிகளில் சென்று புகழ் பெறும்போது நாம் கன்னட மொழிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மறந்து விடக்கூடாது என்றும் கூறினார்.. இது நிச்சயம் ராஷ்மிகாவின் கருத்துக்கு குட்டு வைக்கும் விதமாக யஷ் கொடுத்த பதிலடி என்று தான் கன்னட திரையுலகினர் கூறி வருகிறார்கள்.