தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட காஞ்சி சங்கராச்சாரியாரைக் கண்டித்து, ராமேஸ்வரம் சங்கர மடத்தை தமிழ் தேசிய கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரண்டு நாள்களுக்கு முன் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற காஞ்சி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்துநிற்காமல் விழா மேடையில் அமர்ந்தவாறு இருந்தார். மேடையில் இருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்துநின்றனர். விஜயேந்திரர் மட்டும் எழாமல் அமர்ந்திருந்தார். இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட விஜயேந்திரரைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் தமிழ் தேசிய கட்சியினர், அதன் மாநில துணைச் செயலாளர் கண். இளங்கோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரத்தில் உள்ள காஞ்சி சங்கரமடத்தின் உள்ளே சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய இவர்களை, போலீஸார் வந்து வெளியேறுமாறு கூறினார். ஆனால், அவர்கள் தொடர்ந்து மடத்தினுள்ளேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அங்கு வந்த சங்கர மட பொறுப்பாளர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியே செல்லுமாறு கூற, பதற்றம் நிலவியது. போலீஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மடத்திலிருந்து வெளியேற்றி கலைந்துபோகச் செய்தனர். இந்நிலையில், சங்கர மடத்தினுள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் தேசிய கட்சியிரைக் கைதுசெய்யக் கோரி, ராமேஸ்வரம் கோயில் காவல் நிலையத்தில் சங்கர மட நிர்வாகத்தின் சார்பில் புகார் அளித்துள்ளனர்.