ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என அக்கட்சியின் தமிழக தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கவில்லை.
ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் எங்களுக்கு ஒப்புதல் இல்லை. அவர்களுடைய கருத்தை அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலேயே 7 பேர் விடுதலை பற்றி சொல்லியிருக்கிறார்கள்.
எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் வலியுறுத்தவில்லை. எனவே எங்கள் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழர்கள் என்ற அடிப்படையில் ஏழு பேரை விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என கே. எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக ‘ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்துள்ளனர்.
மேலும் மிகப்பெரிய விலையையும் கொடுத்துள்ளனர். தங்களை விடுவிக்க கோரி 7 பேரும் அளித்த கோரிக்கைகள் மீது முடிவெடுப்பதில் ஏற்கனவே கூடுதலான தாமதம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று காலமுள்ள இந்த சூழ்நிலையில் சிறைகளில் கைதிகள் மொத்தமாக அடைத்து வைப்பது தேவையற்றது என நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
எனவே மாநில அரசு கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதியன்று அளித்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு, 7 பேருக்கான தண்டனையில் விலக்களித்து, உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்’ என குடியரசுத் தலைவருக்கு மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இன்று முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் முப்பதாவது நினைவு தினம் இந்தியா முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது என்பதும், அவருடைய நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது