ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட, பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து, மத்திய அரசின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து, பா.ஜ., ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்’ என, தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது கவர்னர் முடிவெடுக்காததால், மே 18ஆம் திகதி பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
அதை தொடர்ந்து, நளினி, முருகன் உள்ளிட்ட மற்ற ஆறு பேரையும், இம்மாதம் 11ஆம் திகதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடும் அதிருப்தி

காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ், ‘ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டது துரதிஷ்டவசமானது. இது முற்றிலும் ஏற்க முடியாதது’ என, தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆறு பேர் விடுதலை, இப்போது தேசிய பிரச்சினையாக மாறி வருகிறது. நாடு முழுதும் காங்கிரஸ் மாநில தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், ‘பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை தடுக்க, மத்திய பா.ஜ., அரசு, உறுதியான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை’ என குற்றம் சாட்டியுள்ளனர்.
இவர்களின் விடுதலையை எதிர்த்துமத்திய அரசு, மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தி உள்ளனர்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ‘ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து, மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், காங்கிரஸ் தாக்கல் செய்யும்’ என கூறியுள்ளார்.
இதனால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து, பா.ஜ., தலைவர்கள் ஆலோசித்து வருவதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.