பஷில் ராஜபக்ஷவிற்கான நன்றி கடனை அமைச்சு, இராஜாங்க அமைச்சு நியமனங்கள் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திருப்பி செலுத்துகிறார்.
முச்சக்கர வண்டி சாரதிக்கு ஒரு வாரத்திற்கு 5 லீற்றர் எரிபொருள் வழங்கும் நிலையில் இராஜாங்க அமைச்சருக்கு ஒருமாதத்திற்கு 1350 லீற்றர் எரிபொருள் வழங்குவது எந்தளவிற்கு நியாயமானது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 37 இராஜாங்க அமைச்சர்களும் நாட்டுக்கு பிறிதொரு சுமையாக உள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காரியாலயத்தில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 37 இராஜாங்க அமைச்சுக்களை நியமித்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை அமைச்சுக்களும் நியமிக்கப்படும். நாட்டு மக்கள் தமது அன்றாட வாழ்க்கையினை பெரும் போராட்டத்திற்கு மத்தியில் முன்னெடுத்து செல்லும் வேளை இந்த இராஜாங்க அமைச்சு அவசியமா,?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண இராஜாங்க அமைச்சுக்களை வழங்கியுள்ளார். பஷில் ராஜபக்ஷவிடமிருந்து கடனாக பெற்றுக்கொண்ட ஜனாதிபதி பதவிக்கான கடனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராஜாங்க அமைச்சின் ஊடாக மீள் செலுத்துகிறார்.
இராஜாங்க அமைச்சுக்கான வரபிரசாதங்களை பெற்றுக்கொள்ள போவதில்லை என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக்கொள்வதை தவிர்த்து ஏனைய வரபிரசாதங்கள் அனைத்தும் இராஜாங்க அமைச்சர்களுக்கு கிடைக்கப்பெறும்.
இராஜாங்க அமைச்சர்களுக்கு 3 உத்தியோகப்பூர்வ வாகனங்கள் கிடைக்கப்பெறும்.மேல் மாகாணத்திற்கு உட்பட்ட இராஜாங்க அமைச்சருக்கு ஒரு பெற்றோல் வாகனத்திற்கு ஒரு மாதத்திற்கு 600 லீற்றர் பெற்றோலும்,வெளிமாகாண இராஜாங்க அமைச்சருக்கு ஒரு பெற்றோல் வாகனத்திற்கு 750 லீற்றர் பெற்றோலும், அதனடிப்படையில் டீசல் வாகனமாயின் மேல்மாகாணத்திற்கு 600 லீற்றரும், வெளி மாகாணங்களுக்கு 800 லீற்றரும் வழங்கப்படும்.
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வாரத்திற்கு 5 லீற்றர் எரிபொருள் வழங்கப்படுகின்றன நிலையில், இராஜாங்க அமைச்சர்களுக்கு ஒரு மாதத்திற்கு மாத்திரம் 1350 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும்.புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கு எரிபொருள் ஊடாக வரபிரசாதங்கள் வழங்கப்படும்.இவர்களுக்கு மாத்திரம் ஐந்து தொலைபேசி வழங்கப்படும். மாதாந்தம் 40000ஆயிரம் ரூபா வரி நீங்கலாக தொலைபேசி கட்டணம் செலுத்தப்படும்.
இராஜாங்க அமைச்சர்களுக்கு மாத்திரம் 15 சேவையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்,இவர்களில் 5 பேருக்கு அரசாங்கத்தின் ஊடாக தொலைபேசி வழங்கப்படும். அதற்கான கட்டணத்தையும் அரசாங்கமே செலுத்தும். மறுபுறம் இராஜாங்க அமைச்சருக்கு 8 பொலிஸாரை உள்ளிடக்கிய பாதுகாப்பு வழங்கப்படும்.இவ்வாறே மக்களின் வரி பணம் வீண்விரயம் செய்யப்படுகிறது.மறுபுறம் இராஜாங்க அமைச்சுக்கான அலுவலகத்திற்காக பாரிய நிதி செலவிடப்படும்.இராஜாங்க அமைச்சர்களுக்காக பாரிய நிதி செலவிடப்படும் நிலையில் மக்கள் மீது மனசாட்சியில்லாத வகையில் வரி வீதம் அதிகரிப்பு சுமத்தப்படுகிறது. இராஜாங்க அமைச்சர்கள் படுப்பதற்கும் அரசாங்கமே கட்டிலும்,மெத்தையும் கொடுக்கும் கேவலமான நிலை காணப்படுகிறது.
தன்மை தெரிவு செய்தவர்களை மகிழ்விப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை விரிவுப்படுத்திக்கொள்கிறார்.அமைச்சுக்களும்,இராஜாங்க அமைச்சுக்களும் அதிகரிக்கும் போது அதன் சுமையையும் நாட்டு மக்களே எதிர்கொள்ள நேரிடும் என்றார்.