மஹிந்தவின் பிரதமர் பதவி இராஜிநாமா, தற்போது பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வெளியேற்றம் இரண்டுக்கும் பிரதமர் ரணிலை நோக்கி சிலர் கை நீட்டுகின்றனர்.
இரண்டு சம்பவங்களின் பின்னணியிலும் பிரதமர் ரணிலே இருப்பதாக பலர் விமர்சிக்கின்றனர். ஒரு சிலர் அவரது சாணக்கிய நகர்வாக இருக்குமோ என்று யோகிக்கின்றனர்.
ஆரம்பத்தில் ரணிலை பிரதமராக ஜனாதிபதி நியமித்த பின்னர் மஹிந்த, நாமல் என பலரும் ஆர்வமாக அவரை வாழ்த்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். ராஜபக்ஷக்களை காப்பாற்றுவதற்கே ரணில் பிரதமரானார் என்ற விமர்சனங்கள் கிளம்பியிருந்தன.
ஆனால் அதை பொருட்படுத்தாக ரணில், பொருளாதார மீள் கட்டமைப்புகளுக்கான தனது நகர்வை பல விதங்களிலும் முன்னெடுத்தார். சில சந்தர்ப்பங்களில் நாட்டின் நெருக்கடி குறித்த உண்மையான தகவல்களை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் 21ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எழுந்த சர்ச்சைகளையும் அவர் சரியாக கையாண்டார். ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தல் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்டோர் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்ற இரண்டு விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதியிடம் தர்க்கப்பட்டிருந்தனர். இதன் பின்னணியில் பஷில் ராஜபக்ஷவே செயற்பட்டிருந்தார்.
ஏனென்றால் அவருக்கு நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என்ற கனவு உள்ளது. இரட்டை குடியுரிமை விடயம் கொண்டு வரப்பட்டால் தனக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது. அதை தக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு சில நேரங்களில் அது சாத்தியமானாலும் 21இல் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டால் எதிர்காலத்தில், தன்னால் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக வலம் வர முடியாது.
ஆகவே இந்த இரண்டு விடயங்களிலும் அவரால் ரணிலை தனது விருப்புக்கேற்ப சமரசம் செய்ய முடியவில்லை. தனக்கு பாராளுமன்றில் ஆதரவாக உள்ள சிலரை அழைத்துக்கொண்டு ரணிலை அவர் சந்தித்தாலும் கூட அவர் ஜனாதிபதியை நோக்கியே கை காட்டியிருக்கின்றார்.
‘ஜனாதிபதியின் அனுமதியின்றி அரசியலமைப்பில் எவ்வாறு திருத்தங்களை மேற்கொள்ள முடியும்? ஆகவே அவரையே சென்று சந்தியுங்கள்’ என கூறியிருக்கிறார் பிரதமர்.
நாட்டின் நெருக்கடிகளுக்கு பிரதான காரணகர்த்தாவாக அனைவராலும் கை காட்டப்பட்டு ஜனாதிபதியின் கோபத்துக்கும் ஆளாகியிருக்கும் பஷில் எவ்வாறு ஜனாதிபதியிடம் செல்வார்? 21 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடம் தெரிவித்து விட்டார்.
ஆகவே இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் அதன் பிறகு தோல்வியடைந்தவராக பாராளுமன்றிலிருந்து வெளியேறுவதைத் தவிர்ப்பதற்கு பஷில் தனது இராஜினாமா முடிவை எடுத்திருக்கலாம். இந்த தோல்வி கதையை அவருக்கு முன்பதாகவே ஜனாதிபதி கூறி விட்டார்.
தான் தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவி விலகிச் செல்ல மாட்டேன் என்றும் ஐந்து வருட பதவி காலத்தை தொடர்ந்தும் வகிப்பேன் என்று கடந்த வாரம் தெரிவித்திருந்த ஜனாதிபதி, அடுத்த தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இது நாட்டு மக்களை சிரிப்பில் ஆழத்திய கருத்தாக இருந்தது.
இலங்கை –அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் போதும் மைதான அரங்கில் திரண்டிருந்த இரசிகர்கள் ‘கோ ஹோம் கோட்டா’ கோஷத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஆனால் இப்போதைக்கு ராஜபக்ஷக்களுக்கும் பொது ஜன பெரமுனவினருக்கும் பாதுகாப்பாக இருப்பதே ஜனாதிபதி ஒருவரால் மட்டும் தான். மாறாக பிரதமர் ரணில் இல்லை. ஆகவே அவர் தனது பதவிக் காலம் முடிவடையும் வரை பதவியிலிருக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இப்பாது கூட அவர் மகிந்தவை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி தான் வருகின்றார்.
மே மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் பின்னணிக்கு முன்னாள் பிரதமர் மஹிந்தவும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்பதாகவே அவர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கு வெளிநாட்டு தடை உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்கும்படி உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.
ஆனால் ஒரு மாத காலமாகியும் மஹிந்த அதை செய்யவில்லை. அவர் ஒரு சட்டத்தரணியாவார். அவ்வாறு இருந்து கொண்டே அவர் சட்டத்துக்கு முரணாக நடந்து கொண்டு நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தி வருவதை ஜனாதிபதியும் பார்த்துக் கொண்டு சும்மா தான் இருக்கின்றார். இது ஒரு வகையில் அவரை பாதுகாக்கும் செயற்பாடேயன்றி வேறு என்ன?
காலி முகத்திடல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ விளங்குகிறார். அவரது உசுப்பேற்றிய வன்முறை பேச்சு காரணமாகவே பலரும் உந்தப்பட்டு வெறியாட்டம் ஆடியிருந்தனர். இந்த சம்பவத்தின் சந்தேக நபராக பெயரிடப்பட்டிருக்கும் அவரை கைது செய்வதற்கு பொலிஸார் திணறியிருந்தனர்.
ஜனாதிபதி தொடர்ந்தும் தனது ஆட்சி காலம் முடியும் வரை பதவியிலிருப்பதற்கு பிரதமர் ரணிலின் அனுசரணை அவசியம். ஜனாதிபதியை வைத்துக்கொண்டே காய்களை நகர்த்துவது தான் ரணிலின் சாணக்கியம். தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில் நாட்டு மக்கள் உட்பட எவரினதும் எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொள்ளாது அரசியல் செய்வது இலகுவான விடயமல்ல. ஆனால் அதை சவாலாக முன்னெடுக்கிறார் பிரதமர் ரணில்.
வெளியிலிருந்து ரணிலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பொதுஜன பெரமுனவினரும் ராஜபக்ஷக்களும் என்ன தான் செயற்பட்டாலும் அந்த பழி ஜனாதிபதி கோட்டாபயவையே சாரும். இதை ரணில் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார். இப்போதைக்கு ரணிலை ஜனாதிபதி கோட்டாபய விட்டு விட மாட்டார்.
அது அவருக்கு மேலும் அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தும். ரணில் ஆரம்பித்திருக்கும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை தொடர்வதற்கு வேறு எவரும் முன் வரமாட்டர். ரணில் பதவி விலகும் வகையில் ராஜபக்ஷக்களோ அல்லது பொதுஜன பெரமுன உறுப்பினர்களோ செயற்பட்டால் நாட்டு மக்களின் உச்ச வெறுப்பை அவர்கள் மீண்டும் சம்பாதிக்க நேரிடும்.
மக்களை மீட்கவே நான் வந்தேன், என்னை இவர்கள் இயங்கவிடவில்லையென ஒரு வார்த்தை ரணில் கூறி விட்டு வெளியேறினால் பாதிப்பு யாருக்கு? ஆனால் தற்போது தனது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருக்கும் பஸில், ஊடகவியலாளர் சந்திப்பில் ‘மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க நாம் தயார்’ என்று கூறியிருக்கிறார். அந்த ‘நாம்’ என்பது யார் என்பதே இங்கு எழுந்திருக்கும் முக்கியமான கேள்வி.
பஷிலின் இராஜினாமா அவருடைய தனிப்பட்ட முடிவாக இருக்காது. இது குறித்து அவர் பொதுஜன பெரமுனவில் தனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் உறுப்பினர்கள், சகோதரர் சமல், மஹிந்த ஆகியோரிடமும் கலந்தாலோசித்திருப்பார். தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட போவதாக அவர் அறிவித்திருப்பதன் பின்னணியில் தேர்தலொன்றுக்கு முகங்கொடுப்பதற்கு அவர் ஆர்வமாக இருக்கின்றாரா?
இப்போதைய சூழலில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்தால் முடியுமா? அதை மக்கள் தான் ஏற்றுக்கொள்வார்களா ? இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளில் எந்த நாடு அவரை அவ்வாறு கூறச்சொன்னது? இது அரசியல் மட்டத்தில் எழுந்திருக்கும் கேள்விகள்.
ஆனால் பொதுவான கேள்வியாக இருப்பது என்னவென்றால், ‘ ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டால் மக்களுக்கு மீட்சி கிடைத்து விடுமா?’ என்பதாகத்தான் உள்ளது. தேர்தலுக்கு தயாராக இருப்பவர்கள் அதையும் தானே கூற வேண்டும். ஊடகவியலாளர் சந்திப்பில் அதைப்பற்றியெல்லாம் பஷில் கதைக்கவில்லை. எது எப்படியோ அவர் பாராளுமன்றத்துக்கு வெளியே பறக்கத் தயாராகி விட்டார்.