யாரோ ஒருவர் செய்த திருட்டுகளை ராஜபக்சக்கள் மீது சுமத்தி ராஜபக்சக்கள் சிறைக்குச் செல்வதும் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலையாவதும் வழக்கமாகிவிட்டது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானங்களை மாற்றும் போது நடந்ததாகக் கூறப்படும் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் பதிவு வழங்குவதற்காக நேற்றைய தினம் (26.02.2025) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதந்திருந்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நடவடிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுமுறை தினமென்றாலும் விசாரணை நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகிறோம்.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, ஏனைய சமய விடுமுறை தினங்களிலும் எங்களைப் பற்றி விசாரணைகளை முன்னெடுப்பது போன்றே மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்கும் பொருளாதார நெருக்கடிக்காக வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு இவ்வாறு அயராது உழைத்தால் சிறப்பாக இருக்கும்.
ஏதாவது திருட்டை செய்துவிட்டு அதனை ராஜபக்சக்கள் மீது சுமத்தினால் ராஜபக்சக்கள் சிறைக்கு செல்வார்கள். சம்பந்தப்பட்டவர்கள் விடுதலையாகிவிடுவார்கள் என்பது இலகுவாகிவிட்டது.
அரசியல் பழிவாங்கல்
அரசாங்கமும் இதனை பழக்கமாக எடுத்துச் சென்றால் நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு குற்றங்களையும் எங்களின்மீது சுமத்திவிட்டு குற்றவாளிகள் தலைமறைவாகிவிடுவார்கள்.

அதனால் அரசியல் பழிவாங்கலை ஓரம் வைத்துவிட்டு உண்மையான குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். எயார் பஸ் கொடுக்கல் வாங்கலுக்கும் எனக்கும் உண்மையில் எந்த தொடர்பும் இல்லை.
நான் தவறிழைக்கவில்லை என்பது நீதிமன்ற வழக்கு தீர்ப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
மாறாக யாராவதொருவர் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அது தீர்மானமாகாது. நீதிமன்றத்தில் என்னில் தவறு இல்லை என்பதை நிரூபிப்போம் என்றார்.