குடந்தையான்
தமிழக அரசியலை பொறுத்தவரை கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரிய சிந்தனைகளை உள்ளடக்கிய திராவிட சித்தாந்தங்களுக்கு மக்கள் பேராதரவு அளித்து, தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்திருக்கிறார்கள்.
இதன் காரணமாக சமூகத்தில் பல்வேறு சாதிகளாக பிரிந்து கிடக்கும் மக்கள் தங்களுக்கான உரிமையை, பெறுவதன் மூலம் முன்னேறிய சமூகமாக வாழ்ந்துவருகிறார்கள்.
தமிழகத்தில் இன்னும் முன்னேறாத அதாவது வாய்ப்புகளை அதிக அளவில் பெறாத சமூகங்களுக்கும், இந்த வாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்திலும் ஒருதொகுதியினர் இருக்கின்றனர்.
தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க., ‘திராவிட முறைமை’ அரசு என்பதை அறிவித்து, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற சமூகநீதி- சமநீதி வாய்ப்பை முன்னெடுத்து செல்கிறது. இதற்கு மாபெரும் தடைக்கல்லாக முன்னிறுத்திச் செயற்படுகின்றது.
ஆனால் இதனைத் திசைமாற்றுவதற்காக இந்துத்துவா தான் தேசியம் என்ற தத்துவத்தை முன்னிறுத்தி பா.ஜ.க. செயல்படுகிறது. இதற்கு எதிராக கருத்து கூறுபவர்களை கட்டம் கட்டி,‘தேசவிரோதி’, ‘தேசத்துரோகி’என குறிப்பிட்டு அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இவர்களின் அச்சுறுத்தல் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் ஓரளவுக்கு பலன் அளித்தாலும், பகுத்தறிவு சிந்தனைகள் நீண்ட காலங்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் தமிழகத்தில் சிறிதளவும் பலனளிக்கவில்லை. இதனால் இவர்களின் ஆத்திரம் இந்துத்துவாவை பற்றியும். இந்து மதத்தை பற்றியும் தவறாக பேசுபவர்கள் மீது திரும்புகிறது.
அண்மையில் தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, திராவிடக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கு பற்றி பேசும்போது, “குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன் தான். சூத்திரனாக இருக்கும் வரை பஞ்சவன். இந்துவாக நீ இருக்கிற வரை தீண்டதகாதவன். எத்தனை பேர் வேசியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால் தான், அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்” என குறிப்பிட்டிருந்தார்.
ராசாவின் இந்தப்பேச்சுக்கு, மத வெறுப்பு அரசியலை இந்தியா முழுவதும் தீவிரமாக திணித்து வரும் பா.ஜ.க. மற்றும் ஏனைய இந்து அமைப்புகள், இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றின. கண்டனப் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள், பொலிஸ் முறைப்பாடுகள் என்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதுமட்டுமன்றி, பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அதிமுகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தமை விசேடமானதொன்றாகும்
இவ்வளவு ஏன் திமுகவில் இருக்கும் சில மூத்த நிர்வாகிகளே, ராசாவின் பேச்சுக்கு தங்களின் அதிருப்தியையும், வருத்தத்தையும் தெரிவித்தனர். இதற்கு தன்னுடைய இணைய பக்கத்தில், ‘இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகள் இருக்கிறது. மனுதர்மத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்கு முறைகள் இருக்கிறது. இதனை புரிந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், ஆராசாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்க, ராசா மீதான எதிர்ப்பின் வீரியம் குறைய தொடங்கியது. இருப்பினும் இது தொடர்பாக ராசா ஏதேனும் விளக்கமளிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.
இவற்றையெல்லாம் மனதில் வைத்து நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய ஆ.ராசா இது தொடர்பாக விளக்கமளித்து பேசுகையில், ‘மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பலர் விமர்சிக்கிறார்கள். மன்னிப்பு கேட்கக் கூடாது என்று நினைக்கவில்லை. தவறு செய்தவன் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுதான் சிறந்தது. மன்னிப்பு கேட்காத ஆள் அயோக்கியன். மாண்பு உள்ளவன் மன்னிப்பு கேட்பான். நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் அதற்கு முன் நான் என்ன தவறு செய்தேன்? என்று சொல்லுங்கள்” என்றார்.
ப.ஜ.க.வை சேர்ந்த திருப்பதி நாராயணன் போன்றவர்கள் நல்லதொரு எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். இந்து மதத்தில் வேறுபாடுகள் இல்லை என்று சொல்கிறார். அத்துடன் இந்து மதத்தில் வேறுபாடுகள் இருந்தது உண்மை. அது எல்லாம் பழமை வாய்ந்தது. இப்போது அரசியல் அமைப்பு சட்டம் தான் இருக்கிறது என்று திருப்பதி நாராயணன் கூறுகிறார்.
அவர் முன்வைக்கும் வாதம் நியாயமானதாக தோன்றலாம். ஆனால் அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்ற ஆளுநர் ஆர்.என் ரவி, சனாதனம் பற்றி ஏன்பேச வேண்டும்? இதற்கு அவர்கள் விளக்கமும், பதிலும் அளிக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் என்று ஒன்று இருக்கும்போது, அவரால் எப்படி சனாதனம் பற்றி பேச முடியும்? அரசியல் அமைப்பு சட்டம் வந்த பின் மனுதர்மம் இல்லை என்று திருப்பதி நாராயணன் குறிப்பிட்டாரே.. அப்படி என்றால், ஆர்.என்.ரவி பேசியது என்ன? இதற்கு அவர் பதில் சொல்வாரா..?என்று கேள்வி எழுப்புகிறார் ராசா.
ராசாவின் பேச்சு பாஜகவினரை பதம் பார்த்திருக்கிறது. இந்துவிற்கு எதிரியாக தி.மு.க.வை உருவகப்படுத்தி, தமிழகத்தில் இந்துவாக்கு வங்கியை உருவாக்கவேண்டும் என்ற பா.ஜ.க.வின் நீண்ட நாள் திட்டம் இந்த பேச்சின் மூலம் உடைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அண்ணாதுரை காலத்தில் தி.மு.க. மீது வைக்கப்பட்ட சொலவடை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
பா.ஜ.க.விற்கு ஒரு புறம் ஆ.ராசா போன்றவர்கள் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டாலும், ‘சிற்பி’, ‘காலை உணவு திட்டம்’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாமர மக்களின் தேவைகளை துல்லியமாக அவதானித்து, அவர்களுக்கான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார். இதனால் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியை மக்களிடத்தில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கஷ்டப்பட்டு உருவாக்கினாலும், அதனை உடனடியாக நேர்மறையான அதிர்வாக ஸ்டாலின் மாற்றி விடுகிறார்.
“தத்துவம் என்பது எவ்வளவு வலிமையானதாக இருக்கிறதோ அதற்கான திட்டமிடுதலும், வழிமுறையும் வலிமையானதாக இருக்க வேண்டும். வலிமையான தத்துவம் மட்டுமே வெற்றியை தராது. அதற்கு வலிமையான வழிமுறையும் அவசியம். அந்த வழிமுறையை ஜனநாயக அரசியல் சக்திகள் உருவாக்க வேண்டும். அதனை அடியொற்றிய இந்தியாவின் வளர்ச்சிக்கு தொலைநோக்குப் பார்வை கொண்ட கூட்டணி அவசியம்” என்பதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எடுத்துரைத்திருக்கிறார்.
இதன் மூலம் தமிழகத்தில் தி.மு.க.வின் செயல்பாடு நேர்த்தியாகவும், பா.ஜ.க.வின் எண்ணத்தை தவிடுபொடியாக்குவதற்கான வலிமையையும் இருப்பதாக அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.
வட இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏனைய இந்துத்துவா அமைப்புகள் மேற்கொண்ட பல்வேறு அரசியல் உத்திகள்.. தமிழகத்தில் பிரயோகிக்கப்பட்டபோது, எள்ளளவும் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இது தொடர்பாக பா.ஜ.க. முன்வைக்கும் ஒவ்வொரு அரசியல் ரீதியிலான மோதல்களையும், பகுத்தறிவு அரசியலுடனான கருத்தியல் ரீதியாக எதிர்கொண்டு, ஆ.ராசா உள்ளிட்ட தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் பதிலடி அளிக்கின்றார்கள்.
இதனிடையே தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு ரவி பங்குபற்றும் பல்வேறு விழாக்களிலும், நிகழ்வுகளிலும் சனாதனம் குறித்தும், புதிய கல்விக்கொள்கைக் குறித்தும், ஆரிய மதம் குறித்தும் பல கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார் என்பதும், அவருக்கு ஆ.ராசாவின் பேச்சு சரியான பதிலடி என்பது குறிப்பிடத்தக்கது.