‘சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடணும். எப்படியும் ஒரு முறையாவது பந்தைக் கையில் புடிச்சிடணும்’ என்று நினைத்திருந்த பலரின் கனவும் நேற்றுப் பலித்திருக்கும். மைதானத்துக்குள் இறங்கவில்லை. ஆனால், ஃபீல்டிங் செய்தார்கள். இந்தூரில் இந்திய அணி பேட்டிங் செய்தபோது சுமார் 30,000 பேர் ஃபீல்டிங் செய்தார்கள். ஆம், பார்வையாளனாக மைதானம் சென்றவர்கள் ஃபீல்டர்களாகினர்… இலங்கை ஃபீல்டர்கள் பார்வையாளர்களாக மாறினர்… ஹோல்கர் மைதானம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு அனைத்தையும் முன்கூட்டியே வாணவேடிக்கை கொண்டாடியது. ரோஹித்தின் அதிர்வேட்டுகளும், ராகுலின் ராக்கெட்டுகளும் இலங்கை வீரர்களை பந்தாடிவிட்டது. மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கெல்லாம், நிச்சயம் அது மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும்.
20 ஓவர்களில் 260 ரன்கள். மொத்த ஆட்டத்திலும் 32 பவுண்டரி, 31 சிக்சர்கள்… எல்லாமே aerial டீலிங்தான். அப்படியொரு ஆட்டம். மறக்க முடியாத ஆட்டம். ‘ப்ச்… இந்த மேட்ச்சை நேர்ல பாக்காம மிஸ் பண்ணிட்டோமே’ என்று ஏங்கிய நெஞ்சங்களுக்கு, தன் ட்ரேட்மார்க் கமென்டரியால் ஆறுதல் அளித்தார் ஹர்ஷா போக்ளே. அந்த ரசிகர் கூட்டத்தின் ஆரவாரத்துக்கு நடுவே, அவரது குரல் ஒலிக்க, ராகுலும் ரோஹித்தும் வெடிக்க, டிவி-யில் பார்ப்பதற்கும் சிறப்பாகவே இருந்தது இந்த மேட்ச்!
மிட்விக்கெட் திசை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது அந்தப் பந்து. ஃபீல்டர் இருந்தார். ஆனால், பவுண்டரி எல்லையைத் தாண்டி ரசிகர்களுக்கு மத்தியில் தரையிறங்கியது. “Fashion is…today..to hit the ball in the second tier” – போக்ளேவின் அந்த வர்ணனை கேட்டதும் புன்னகை. குணரத்னேவின் அந்தப் பந்தை, ரோஹித் சிக்ஸருக்கு விரட்டுவதற்கு முன்பாகவே 5 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருந்தன. எல்லாம் இரண்டாம் அடுக்கைத்தான் அடைந்திருந்தன. எல்லாமே இமாலய சிக்ஸர்கள். பவுண்டரி எல்லையின் தூரம் குறைவுதான். ஆனால், அந்த ஷாட்களில் இருந்த பலம்… பந்து இரண்டாம் அடுக்கை எட்டுவதை ஈஸியாக்கிவிட்டது.
முதல் நான்கு ஓவர்கள்வரை வழக்கம்போல் அமைதிகாத்த ரோஹித், அதன்பின் வெளுத்துவாங்கினார். மிட்விக்கெட் திசை சிக்சர்களால் மிரட்டினார். ஐந்தாவது ஓவரின் முதல் பந்து, குட் லெந்த்தில் வீசினார் நுவான் பிரதீப். கொஞ்சம் டைமிங் மிஸ். ஆனால், ரோஹித் அடித்த வேகத்தில் மிட்விக்கெட்டை அடைந்தது. அடுத்த ஓவர், தனஞ்செயா. மிஸ் ஹிட். ஆனால், சிக்ஸ். ஒவ்வொரு ஷாட்டிலும் அவ்வளவு பலம். அதன்பிறகு அடித்ததுதான் அந்த குணரத்னேவின் பால். அந்த சிக்ஸரோடு, 23 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தார் ரோஹித். அடுத்த பந்து… இந்தூரையே தாண்டுமளவு பறந்தது. “ohoho..Go and get another ball” என்று அலறிக்கொண்டிருந்தார் ஹர்ஷா. ஒருவழியாக 3-வது அடுக்கில் ‘லேண்ட்’ ஆனது. அடுத்து, 11-வது ஓவரை பெரேரா வீசவர, வரிசையாக 4 சிக்ஸர்களை சிதறவிட்டார் ஹிட்மேன்.
10.3 – இறங்கி வந்து புல் ஷாட் அடிக்க, மிஸ் ஹிட். பவுண்டரி எல்லையில் ஃபீல்டர் கேட்சை நழுவவிட, சிக்ஸ்…
10.4 – வைட்
10.4 – 6…போக்ளே : There he goes. Back into the SECOND TIER
10.5 – 6…போக்ளே : Here he goes again. This time he finds another part of the ground. BUT STILL IT GOES TO SECOND TIER
10.6 – 6…போக்ளே : He goes again. I told you, catch them in the stands.
இப்படி, ரோஹித் அடிக்க… ஹர்ஷா புகழ…அப்பப்பா, இந்திய ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 35 பந்துகளில் வந்துவிட்டது டி-20 யின் அதிவேக சதம். இலங்கைக்கு எதிராக ரோஹித் இப்படி அடிப்பது நமக்கு ஒன்றும் புதிதல்லவே. அதுதான் தொடருக்கு 2 செஞ்சுரி, 2 வருஷத்துக்கு ஒரு டபுள் செஞ்சுரி என்று லங்காவை வெச்சி செய்துகொண்டிருக்கிறார். இதற்கு நடுவே ராகுல் வேறு. அவரும் டி-20 போட்டியில் செஞ்சுரி அடித்தவராயிற்றே. இலங்கையைப் பந்தாட அவருக்கும் ஆசை இருக்காதா என்ன…?
49 பந்துகளில் 89 ரன்கள். 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள். ரோஹித், தன் இரண்டாவது டி-20 சதம் அடித்த இந்தப் போட்டியிலேயே, இவரும் தனது இரண்டாவது டி-20 சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. டிக்வெல்லாவின் அசத்தல் கேட்ச்சால், சதம் மிஸ். ஆனால், அவர் அடித்த ஷாட்கள் எல்லாம்…சான்ஸே இல்லை. மிஸ் டைம்டு சிக்ஸர்கள் இல்லை. துல்லியமான டைமிங்கில், நேர்த்தியாக அடிக்கப்பட்டவை. கிளாசிக்கல் ஷாட்ஸ். அதிலும் அந்த முதல் சிக்ஸர்…
ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, ஷார்ட் பாலாக வீசினார் சமீரா. இரண்டு ஸ்டெப் க்ரீசுக்கு வெளியே வந்து, லாங் ஆஃப் திசையில் 75 மீட்டருக்குப் பறக்கவிட்டார் ராகுல். அந்த ஷாட்டை பார்த்துக்கொண்டே இருக்கலாம். “இந்த சிக்ஸரைப் பற்றி கவாஸ்கரிடம் நாம் கேட்க வேண்டும். இப்படியொரு ஷாட் அடிப்பதைப் பற்றி, கனவில் கூட அவரால் நினைத்துப் பார்க்க முடியாது” என்றார் ஹர்ஷா போக்ளே. இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரைக் கேலி செய்கிறார். அந்த ஷாட்டின் நேர்த்தி, தரம், டைமிங் அப்படி!
பிரதீப் ஓவரில் லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸ். அடுத்து சதுரங்கா டி சில்வா ஓவரில், அவர் தலைக்கு மேலேயே ஒரு பிரம்மாண்ட சிக்ஸ். அனைத்து பௌலர்களையும் இறங்கி வந்து டீல் செய்துகொண்டிருந்தார். அவர் அடித்த சிக்ஸர்கள் மட்டுமல்ல, பவுண்டரிகளும் அவ்வளவு அழகு. இரண்டாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் அடித்த அந்த ஸ்ட்ரெய்ட் டிரைவ்… ஆசம் ஆசம்! இப்படி இருவரும் மாறிமாறி….மாறிமாறி… பார்ட்னர்ஷிப் – 76 பந்துகளில், 163 ரன்கள். ஏற்கெனவே, இலங்கை நொந்துபோயிருக்க, ஒன் டவுனாக இறங்கியது மஹேந்திர சிங் தோனி…!
அவர் தன் பங்குக்கு 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாச, 3 பந்துகள் சந்தித்த ஹர்திக் பாண்டியா கூட பவுண்டரியும் சிக்ஸருமாகவே டீல் செய்ய, 20 ஓவர்களில் 260 ரன்கள் குவித்தது இந்தியா. கடந்த செப்டம்பரில்தான் ஆஸ்திரேலியாவுக்கு 263 ரன்கள் வாரி வழங்கியது இலங்கை. இப்போது இந்தியா! எதிரணியை 35, 36, 38 என சுருட்டிக்கொண்டிருந்ததே இலங்கை என்றொரு அணி, அதே அணிதானா இது? தட், ‘கட்டில் இல்ல, கட்டில் மாதிரி’ மொமன்ட்.
இலங்கை அணியும் முதல் பந்திலிருந்தே அதிரடியாகத்தான் தொடங்கியது. டிக்வெல்லா ஓரளவு நன்றாக ஆடி 25 ரன்கள் எடுத்தார். தரங்கா – குசல் பெரேரா ஜோடி அடித்து ஆடியது. குறிப்பாக குசல் பெரேரா, குல்தீப்பை டார்கெட் செய்து விளாசினார். 14-வது ஓவர்வரை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. 13.1 ஓவருக்கு 145 ரன்கள், 1 விக்கெட். அடுத்த 4.1 ஓவர்களில், 27 ரன்கள், 8 விக்கெட்! மாத்யூஸ் இல்லாத மிடில் ஆர்டர் மரண அடி வாங்கியது.
நம் பௌலர்கள் ரொம்பவெல்லாம் மெனக்கெடவில்லை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, பந்தை மெதுவாக தூக்கி வீச, இலங்கை பேட்ஸ்மேன்களும் ‘மெதுவாக’ தூக்கி அடிக்க, பாண்டியாவும் பாண்டேவும் ஆளுக்கு 2 கேட்ச் பிடித்து, கேட்சிங் பயிற்சி செய்துகொண்டிருந்தனர். அவர்கள் போக, தோனி தன் பங்குக்கு வழக்கம்போல் 2 ஸ்டம்பிங். சாஹல் – “ஒண்ணு, ரெண்டுலாம் இல்ல… எடுத்தா நாலு விக்கெட்டுதான்” என அடம்பிடிக்கிறார். குல்தீப்புக்கும் நாலு. சதுராங்கா டி சில்வா அவுட் ஆனதெல்லாம்… ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போன பந்தை, ‘நீ எங்க போற…இங்க வா’ என ரிவர்ஸ் ஸ்வீப் செய்து ஸ்டம்பில் சொருகிக்கொண்டார்.
“The spin twins does it again” என்ற குரல்வேறு ஒலித்துக்கொண்டிருந்தது. லிமிடட் ஓவர்ஸ் ஃபார்மட்டில், தவிர்க்கமுடியாத சக்தியாக சாஹல் – குல்தீப் கூட்டணி உருவெடுத்துவிட்டது. இந்த 2 டி-20 போட்டிகளில், இருவரும் சேர்ந்து 15 விக்கெட்டுகள் அள்ளியுள்ளனர். இறுதியாக 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரையும் கைப்பற்றிவிட்டது இந்தியா. அடுத்த ஆட்டம் சிராஜ், ஹூடா போன்றோருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். போட்டிக்கு நடுவே போக்ளே ஒரு வார்த்தை சொன்னார், “பௌண்டரி எல்லையை கேலிக்கூத்து ஆக்க முடியுமென்றால், அது இதுதான்”…ஆம், அது இதுதான்!