இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்துவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இந்திய அணியின் இன்னிங்ஸைத் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 38 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், இந்த ஜோடி பிரிந்தது. 17 ரன்களுடன் கேப்டன் ரோகித் ஷர்மா ஆட்டமிழந்தார். அவர் 15 ரன்கள் எடுத்திருந்தபோது, சர்வதேச டி20 போட்டிகளில் 1,500 ரன்கள் எடுத்தார். விராட் கோலிக்குப் பின்னர், இந்த மைல்கல்லை எட்டும் 2 வது வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்தார். இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், 24 ரன்களில் ஆட்டமிழந்தார். 2 வது விக்கெட்டுக்கு ராகுலுடன் இணைந்து அவர் 73 ரன்கள் குவித்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல், 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர், கைகோத்த தோனி-மணீஷ் பாண்டே இணை இறுதி ஓவர்களில் அதிரடிகாட்ட, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. தோனி 39 ரன்களுடனும், மணீஷ் பாண்டே 32 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ், பெரேரா மற்றும் அறிமுக விரர் பெர்ணாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.