ரஹ்மான் இசையால் அதிர்ந்த அரங்கம்: ஃபுட்சால் கால்பந்து லீக் கோலாகல தொடக்கம்!
ஃபுட்சால் கால்பந்து பிரிமியர் லீக் போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
இந்த கால்பந்து போட்டியின் தொடக்க நிகழ்ச்சியை கவர்ச்சி தொகுப்பாளினி மந்திரா பேடி தொகுத்து வழங்கினார்.
இதில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டு தனது இசையால் அரங்கத்தை அதிரவைத்தார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கோலாகலமாக தொடங்கிய இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.
இந்த போட்டிக்கான தூதராக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டியில் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் சென்னை, மும்பை, கொச்சி அணிகளும், ‘பி’ பிரிவில் கோவா, கொல்கத்தா, பெங்களூர் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
40 நிமிடத்தில் விறுவிறுப்புடன் நடக்கும் இந்த ஃபுட்சால் போட்டியில் ஒரு அணியில் மொத்தம் 12 வீரர்கள் இருப்பார்கள். ஆனால் களத்தில் கோல் கீப்பர் உட்பட 5 வீரர்கள் மட்டுமே விளையாடுவார்கள்.
உள்ளரங்க மைதானத்தில் மட்டுமே போட்டி நடைபெறும். கோல் கம்பம் மற்றும் பந்து வழக்கத்தை விட சிறிய அளவில் இருக்கும்.
முதல் லீக் போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை மும்பை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.