ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கெய் பல்பொருள் அங்காடியில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பாக விசாரணைகள் விரிவாக்கப்பட்டுள்ளன.
வில்ட்ஷிட் பகுதியில் 66 வயதான செர்கெய்யும் அவருடைய மகளான 33 வயதுடைய யூலியா ஸ்க்ரிபாலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்பொருள் அங்காடி ஒன்றின் மேசையில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர்.சந்தேகத்திற்குரிய பொருள் ஒன்று இவர்களின் மயக்க நிலைக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
குறித்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் தம்மிடம் தகவல் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள ரஷ்யா, பிரித்தானியா வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயார் என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் செய்தித் தொடர்பாளர், ‘நாங்கள் இந்த துயரமான நிலைமையை அவதானித்து வருகிறோம். ஆனால், அங்கு என்ன நேர்ந்தது என்பது குறித்தும், அவர் என்ன செய்தார் என்பது தொடர்பாகவும் எவ்வித தகவல்களும் எம்மிடம் இல்லை’ என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான ஸ்க்ரிபாலின் மனைவி, மகன் மற்றும் மூத்த சகோதரர் ஆகியோர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே உயிரிழந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட உளவாளிகள் இடமாற்றத்தின்போது, பிரித்தானியாவால்; அகதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
ரஷ்ய ராணுவத்திலிருந்து ஓய்வுப் பெற்ற புலனாய்வு அதிகாரியான இவர், கடந்த 2006 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் புலனாய்வு அமைப்பான எம்ஐ6 சார்ந்த இரகசியங்களை பெறும் நோக்கில் செயற்பட்ட ரஷ்ய உளவுத்துறை முகவர்கள் குறித்த தகவல்களை பகிர்ந்ததாக கைதுசெய்யப்பட்டு 13 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் 2010 ஆம் ஆண்டு உளவாளிகள் இடமாற்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.