ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிந்து பல ஏக்கர் நிலப்பரப்புகளை நாசமாகியுள்ளது.
ரஷ்யா
ரஷ்யாவின் வனப்பகுதியில் 8 இலட்சம் ஹெக்டயர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
சைபீரிய வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 500 ஹெக்டேயர் பரப்பளவில் 22 புதிய இடங்களில் நெருப்பு பற்றி எரிகிறது. இதனால் ஏற்பட்டுள்ள புகை மண்டலம் அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது.
வனப்பகுதியை ஒட்டியுள்ள கோர்னி என்ற பகுதியை புகை சூழ்ந்துள்ளதால் அங்கு வாழும் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தொடர்ந்து எரியும் நெருப்பை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்களுடன், இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
நெருப்பு தொடர்ந்து எரிவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா
அமெரிக்காவில் ஓரேகான் மாநிலத்தில் 3 இலட்சம் ஹெக்டயர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீயினால் ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளார்கள்.
ஓரிகான் மாநிலத்தில் வரலாற்றில் மிகப் பெரிய ஒன்றான அழிவுகரமான பூட்லெக் தீயை கட்டுக்குள் கொண்டு வர 2,000 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி ஆரம்பித்த காட்டுத்தீயினால் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை விடப் பெரிய பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
13 அமெரிக்க மாநிலங்களில் பரவும் 80 க்கும் மேற்பட்ட பெரிய தீக்களில் இதுவும் ஒன்றாகும். இது வெப்ப அலைகள் மற்றும் அதிக காற்று ஆகியவற்றால் தூண்டப்படுகிறது.
காட்டுத்தீ காரணமாக 2,000 குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு, குறைந்தது 160 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இதுவரை எரிந்து நாசமாகியுள்ளது.
கிளமத் நீர்வீழ்ச்சி மற்றும் ரெட்மண்ட் உட்பட பல நகரங்களில் வசிப்பவர்களுக்காக இரண்டு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.