உக்ரைன்-ரஷியா போர் 40-வது நாளாக தொடர்கிறது.கீவ் பகுதியில் இருந்து 410 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில்,புச்சா நகரில் பொதுமக்களை தமது படைகள் கொலை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை ரஷியா மறுத்துள்ளது.
12:30: ரஷியப் படைகள் புச்சா நகரத்தில் படுகொலை நிகழ்த்தியுள்ளது என உக்ரைன் ராணுவம் குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்த ரஷியா, இது உக்ரைனின் ஆத்திரமூட்டும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்துள்ளது.
09:00: புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டிருப்பதற்கு ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
புச்சா படுகொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா.சபை பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உத்தரவிட்டுள்ளார்.
05.50: செர்னிஹிவ் பகுதியில் உள்ள சில நகரங்களை ரஷிய படைகளிடம் இருந்த மீட்டெடுத்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து செர்னிஹிவ் மற்றும் தலைநகர் கீவ் இடையேயான சாலை திங்கட்கிழமை பிற்பகுதி முதல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக செர்னிஹிவ் நகரம் 70 சதவீதம் அழிந்து விட்டதாக அதன் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
02:30: போர் மூலம் உக்ரைன் மக்களை ரஷியா இனப்படுகொலை செய்து வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார். தமது நாட்டில் 100 இனங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷிய படைகளின் தாக்குதல் தமது தேசிய இனங்களை அழிக்கும் நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.
02:20: ரஷிய படைகள் தாக்கியதால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உக்ரேனிய உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷிய போரினால் மக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு பேச முடியாத அளவுக்கு மன அழுத்தத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
12.10: தலைநகர் கீவ் பகுதியில் கிடந்த 410 உடல்களை உக்ரைன் அதிகாரிகள் மீட்டுள்ளனர். ரஷிய ராணுவத்தின் ஒரு மாத கால தாக்குதல்களால் 300 குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டதாக புச்சா நகர மேயர் தெரிவித்துள்ளார்.
03.04.2022
19.00: கெர்சன் மாகாணத்தில் உள்ள ஸ்னோவ்ஸ்க் மேயர், செர்னிஹிவ் மாகாணத்தில் உள்ள பெரிஸ்லாவ் மேயர் ஆகியோர் ரஷியாவிடம் இருந்து விடுவிக்கப்பட்டதாக கீவ் மேயர் தெரிவித்துள்ளார்.
18.30: உக்ரைனில் ரஷிய ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரில், லிதுவேனியாவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் மேன்டஸ் கிவேதரவிசியஸ் கொல்லப்பட்டுள்ளார்.
17.00: மைகோலைவ் நகரில் ரஷியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக அந்நகர மேயர் தெரிவித்தார்.
15.30: புச்சா படுகொலை தொடர்பான ரஷியாவிடம் விசாரணை நடத்த ஐரோப்பியன் யூனியன் உதவி புரியும் எனத் தெரிவித்துள்ளது.
14.40: கீவ் நகரில் இருந்து ரஷிய படைகள் முழுமையாக வெளியேறியுள்ள நிலையில், ஆங்காங்கே கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு உள்ளதால் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
12.25: உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளைக் கைப்பற்றுவதே ரஷியாவின் நோக்கம் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷிய படைகளை எதிர்த்து தாக்குவதற்கு தேவையான ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
10.20: உக்ரைன் ராணுவம் புச்சா நகரை தங்கள் பாதுகாப்பில் எடுத்துக் கொண்டது. புச்சாவில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் சுமார் 300 பேர் புதைக்கப்பட்டதாகவும், அந்த நகரம் முழுவதும் சடலங்கள் சிதறிக் கிடப்பதாகவும் அந்நகர மேயர் தகவல் தெரிவித்துள்ளார்.
07.30: உக்ரைன் தலைநகர் அருகிலுள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து ரஷியப் படைகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து கீவ் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் முழுமையாக கைப்பற்றி உள்ளோம் என துணை பாதுகாப்பு மந்திரி கன்னா மாலியர் தெரிவித்தார். இர்பின், புச்சா, கோஸ்டோமல் மற்றும் முழு கீவ் பகுதியும் ரஷிய படையெடுப்பாளரிடமிருந்து விடுவிக்கப்பட்டது என அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
03.50: போர் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 18,000 ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு நாடுகள் இடையேயான போரில் 7,000 முதல் 15,000 வரை ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக நேட்டோ அமைப்பு மதிப்பிட்டிருந்த நிலையில், பலியான ரஷிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.
02.04.2022
23.30: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் புதின், போர் குற்றவாளி என்றும் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை வழக்கஞர் கார்லா டெல் பொன்டே வலியுறுத்தி உள்ளார்.
22.50: உக்ரைன் தெற்கு பகுதி நகரமான எனர்ஹோடரில் ரஷியா ஆக்ரமிப்புக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது ரஷியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் நான்கு பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.
18.00: உக்ரைன் மீது பிப்ரவரி 24ம் தேதி ரஷியாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, இதுவரை கிட்டத்தட்ட 41 லட்சம் உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா. கூறி உள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]