”தொடர்வண்டிகளை இயக்குவது என்பது சேவையாக பார்க்கப்பட வேண்டுமே தவிர, லாபம் தரும் வணிகமாக பார்க்கப்படக் கூடாது. சரக்குக் கட்டணத்தை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் உயர்த்தி, பயணிகள் கட்டணத்தை குறைவாக வைத்திருப்பது தான் தொடர்வண்டித் துறையின் மக்கள் நலக் கொள்கையாக இருக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், இன்று வெளியிட்ட அறிக்கையில், ”தொடர்வண்டித்துறை வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்துடன் தொடர்வண்டிகளில் முதல் 50 சதவிகித பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்ட பின்னர், அடுத்த 50 சதவிகித பயணச்சீட்டுகளுக்கு ஒவ்வொரு 10 விழுக்காட்டிற்கும் தலா 10 சதவிகித வீதம் கட்டணத்தை உயர்த்தும் முறையை அறிமுகப்படுத்த கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடர்வண்டி வாரியம் முடிவு செய்தது. அதன்படி தொடர்வண்டிக் கட்டணம் 50 சதவிகிதம் வரை உயரும் என்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அத்திட்டத்தில் மாற்றங்களைச் செய்வது குறித்து பரிந்துரைப்பதற்காக நிதி ஆயோக் அமைப்பின் ஆலோசகர் ரவீந்தர் கோயல் மற்றும் பல்துறை அதிகாரிகளைக் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தான் பல வழிகளில் தொடர்வண்டிகளின் கட்டணத்தை உயர்த்துவதற்கான வித்தியாசமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
தொடர்வண்டிகளில் கீழ் படுக்கை வசதிக்கு கூடுதல் கட்டணம், வசதியான நேரங்களில் புறப்படும் தொடர்வண்டிகளில் கூடுதல் கட்டணம், பண்டிகை, திருவிழா போன்ற நெரிசல் காலங்களில் கூடுதல் கட்டணம், குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் தொடர்வண்டிக்கு கூடுதல் கட்டணம் ஆகியவை வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ள சில திட்டங்களாகும். அதேபோல், திருவிழாக்கள் இல்லாத காலங்களிலும், நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை தொடர்வண்டி சென்றடையும் ஊர்களுக்கும் பயணக் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கலாம் என்பது வல்லுனர் குழுவின் வேறு சில பரிந்துரைகளாகும். இவற்றால் பயணிகளுக்கு பாதிப்பைத் தவிர நன்மை எதுவும் இல்லை.
தொடர்வண்டிகளின் கட்டணத்தை 50 சதவிதம் உயர்த்தினால் கூடுதலாக எவ்வளவு வருவாய் ஈட்ட முடியுமோ, அதே அளவு வருவாயை இந்த முறையிலும் ஈட்ட முடியும் என்று தொடர்வண்டி வாரியம் கருதுவதாகவும், அதனால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்ட நடவடிக்கையாகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தொடர்வண்டிகளில் கீழ் படுக்கை என்பது ஆடம்பரம் அல்ல. அது அடிப்படை வசதியாகும். மூத்த குடிமக்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு கீழ் படுக்கை தான் மிகவும் வசதியாகும். அதுமட்டுமின்றி, கீழ் படுக்கை வசதி தேவைப்படும் மேற்கண்ட பிரிவினர் அனைவரும் சலுகை காட்டப்பட வேண்டியவர்கள் ஆவர். அவ்வாறு இருக்கும் போது கீழ் படுக்கை வசதிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற நடவடிக்கை. நெரிசல் காலங்களில் கூடுதல் கட்டணம் என்பதை ஏற்க முடியாது. தெற்கு தொடர்வண்டித் துறையின் எல்லையில் இயங்கும் அனைத்து தொடர்வண்டிகளும், அனைத்து நாட்களிலும் முழு அளவிலான பயணிகளுடன் தான் இயங்குகின்றன.
இதனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்துத் தொடர்வண்டிகளிலும் கட்டணம் கணிசமாக உயர்த்தப்படுமே தவிர குறைக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. வசதியாக நேரங்களில் புறப்படும் தொடர்வண்டிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து, நள்ளிரவில் சென்றடையும் ஊர்களுக்கான பயணச் சீட்டுக்கு தள்ளுபடி வழங்குவதால் தொடர்வண்டித் துறைக்கு கூடுதலாக வருமானம் வர வாய்ப்பில்லை. இதற்கெல்லாம் மேலாக தொடர்வண்டிகளை இயக்குவது என்பது சேவையாக பார்க்கப்பட வேண்டுமே தவிர, லாபம் தரும் வணிகமாக பார்க்கப்படக் கூடாது. சரக்குக் கட்டணத்தை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் உயர்த்தி, பயணிகள் கட்டணத்தை குறைவாக வைத்திருப்பது தான் தொடர்வண்டித் துறையின் மக்கள் நலக் கொள்கையாக இருக்க வேண்டும்.
தொடர்வண்டித்துறை அமைச்சராக லாலுவும், இணை அமைச்சராக பாட்டாளி மக்கள் கட்சியின் வேலுவும் இருந்த போது இத்தகைய கொள்கை கடைபிடிக்கப் பட்டதால் தான் ஐந்தாண்டுகளில் ஒருமுறை கூட தொடர்வண்டிக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாறாக தொடர்வண்டிக் கட்டணங்கள் இருமுறை 7 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டன. அவர்கள் காலத்தில் தான் அதிக எண்ணிக்கையில் தொடர்வண்டித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இத்தனைக்குப் பிறகும் தொடர்வண்டித்துறை லாபத்தில் செயல்பட்டது; அதன் கையிருப்புத் தொகையும் அதிகரித்தது. எனவே, மக்கள் மீது கட்டண சுமையை சுமத்தினால் தான் தொடர்வண்டித்துறையை லாபத்தில் இயக்க முடியும் என்ற தவறான நம்பிக்கையை விடுத்து, பயணிகள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். பலவகை கட்டண முறையை செயல்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.