இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் செஞ்சூரியன், சுப்பஸ்போர்ட் பார்க் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (26) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கெகிசோ ரபாடா பந்துவீச்சிலும் கே. எல். ராகுல் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்தனர்.
மழை காரணமாக 59 ஓவர்களுடன் முடிவுக்கு வந்த முதலாம் நாள் ஆட்டத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்தப் போட்டியில் நண்ட்ரே பேர்கர், கெகிசோ ரபாடா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சில் இந்தியாவின் முதல் 3 விக்கெட்கள் 24 ஓட்டங்களுக்கு சரிந்தன.
அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (05), யஷஸ்வி ஜய்ஸ்வால் (17), ஷுப்மான் கில் (02) ஆகிய மூவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.
இந் நிலையில் விராத் கோஹ்லி (38), ஸ்ரேயாஸ் ஐயர் (31) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் அஷ்வின் 8 ஓட்டங்களுடன் வெளியேறினார். இந்த மூவரும் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (121 – 6 விக்.)
எனினும் கே. எல். ராகுலும் ஷர்துல் தாகூரும் 7ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஓரளவு தெம்பூட்டினர்.
ஷர்துல் தாகூர் 24 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஜஸ்ப்ரிட் பும்ரா ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார்.
நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிவரும் ராகுல் 105 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 70 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 48ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ராகுல் பெற்ற 14ஆவது அரைச் சதம் இதுவாகும்.
தென் ஆபிரிக்க பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நண்ட்ரே பேர்கர் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தனது 61ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரபாடா 14ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார்.
இதேவேளை, மழை காரணமாக முதலாம் நாள் ஆட்டத்தில் 31 ஓவர்கள் வீசப்படாததால் எஞ்சிய 4 நாட்களிலும் 98 ஓவர்கள் வீதம் வீசப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால். இந்தப் போட்டி 5 நாட்கள் நீடிக்குமா என சந்தேகிக்கப்படுகிறது. ஒருவேளை கடும் மழை பெய்தால் ஆட்டம் 5 நாட்கள் தொடரலாம் என கருதப்படுகிறது.