அரசியல் தீவிரவாத செயற்பாட்டிற்கு நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய காரணத்தினால் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினாரே தவிர சர்வக்கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு அல்ல.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிஷ்ட இலாபச்சீட்டு கிடைத்துள்ளது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இலங்கை கம்யூனிசக் கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஜனாதிபதி தேர்தலும்,பொதுத்தேர்தலிலும் கிடைக்கப்பெற்ற மக்களாணைக்கு முரணாகவே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளார்.
சர்வக்கட்சி தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்த போதும் அதற்கு பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி,மக்கள் விடுதலை முன்னணி இணக்கம் தெரிவிக்கவில்லை.
இவ்வாறான பின்னணியில் மாற்று நடவடிக்கைகள் ஏதும் இல்லாத காரணத்தினால் ஜனாதிபதி இவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
சமூக கட்டமைப்பில் தற்போது தோற்றம் பெற்றுள்ள சகல பிரச்சினைகளுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினர் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டும்.
அரசியல் தீவிரவாத செயற்பாட்டிற்கு நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினாரே தவிர சர்வக்கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு அல்ல என்பதை தெளிவாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கம் எமக்கு கிடையாது.
அவர் தலைமையிலான அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவிகளையும் பொறுப்பேற்க போவதில்லை.
நாட்டுக்கு நன்மை பயக்கும் தீர்மானங்களுக்கு மாத்திரம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.