பிணை முறி விநியோக வழக்கு விசாரணைகளுக்காக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகாவிட்டால், பிரதமர் ரணில் விக்ரம்சிங்கவும், முன்னாள் நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்கவும் பிணையாளிகளாக நீதிமன்றில் முன்னிலையாக வேண்டி ஏற்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவந்தவர்கள், அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துவர வேண்டும். அவர் வராவிட்டால் அவருக்கு பிணையாளியாக சம்பந்தப்பட்டவர்கள் மக்கள் முன்னிலையில் வரவேண்டும்” என கூறினார்.
பிணை முறி விநியோக சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.