அலரி மாளிகையிலிருந்து மடிக்கணினி, நவீனரக புகைப்படக் கருவிகள் உள்ளிட்ட அரசிற்கு சொந்தமான பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலரி மாளிகையிலிருந்து திருடப்பட்ட மடிக்கணினிகளிலிருந்து முக்கிய, இரகசிய தகவல்கள் ஏதேனும் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்படாத நிலையில், இதுவும் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது.
பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அத்தாவுதஹெட்டியின் ஊடக பிரிவின் பொறுப்பில் அலரி மாளிகையின் மாடி அறையொன்றில் வைக்கப்பட்டிருந்த பெறுமதிவாய்ந்த பொருட்களே இவ்வாறு மாயமாகியுள்ளன.
அலரி மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகளின் தேவைக்கென அவற்றை எடுக்க சென்ற வேளையிலேயே அவை காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து உடனடியாக பிரதமருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கொள்ளுபிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், குறித்த விடயம் பொலிஸ் நிலையம்வரை நீடித்தால் அது அலரி மாளிகையிலுள்ள அதிகாரிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என தெரிவித்து குறித்த யோசனையை அலரி மாளிகையின் திட்டமிடல் இயக்குநர் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஹரிஸ்சந்திர விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.
அத்துடன், உள்ளக விசாரணையின் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதுவரை எவ்வித உள்ளக விசாரணைகளும் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை என அலரி மாளிகை தகவல்கள் வெளியாகியுள்ளன.