ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 450 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது.
மும்பையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 103.1 ஓவர்களில் 374 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இளம் வீரரான பிருத்வி ஷா 123 ரன்கள் விளாசினார். தமிழக அணி தரப்பில் சங்கர் 4, அஸ்வின் 3 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. பாபா இந்திரஜித் 105, அஸ்வின் 8 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்கள்.
சிறப்பாக விளையாடிய இந்திரஜித் 247 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 152 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அஸ்வின் 13, ஜெகதீசன் 21 ரன்களில் வெளியேறினர். 339 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில் ஜோடி சேர்ந்த யோ மகேஷ், ரகில் ஷா ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் தமிழக அணி 374 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது. இந்த கூட்டணி 9-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்து அசத்தியது. 104 பந்துகளை சந்தித்த ரகில் ஷா 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
நிதானமாக விளையாடிய யோ மகேஷ் சதம் அடித்தார். கடைசி விக்கெட்டாக விக்னேஷ் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முடிவில் தமிழக அணி 142 ஓவர்களில் 450 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. யோ மகேஷ் 216 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் கோஹில் 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.
76 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய மும்பை அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 22 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் சேர்த்தது. பிருத்வி ஷா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹெர்வாத்கர் 25, ஸ்ரேயஸ் ஐயர் 56 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள மும்பை அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது.