ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரேயானால் அவருக்கு எந்தவிதத்திலும் இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தற்போது அரசியலுக்கு வருவது யார், நடிகர் ரஜினியா அல்லது கமலா என்ற கேள்வி மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சரியா? இல்லையா? என்பதை நான் கண்டிப்பாக பேட்டியில் சொல்லமாட்டேன். ஏனென்றால் என்னுடைய நண்பர் அவர்.
அது சரியாக இருந்திருந்தாலும், தப்பாக இருந்திருந்தாலும் அதை அவரிடம் தான் நான் சொல்வேன். ஒரு பேட்டியில் சொல்லமாட்டேன். ஒருவேளை நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
நானும் ரஜினிகாந்தும் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டால் பெரும் புரட்சியாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் சொல்வார்கள். அது சினிமா நட்சத்திர தேர்தல் இல்லையே. சேர்ந்து நடிப்பது வேறு, சேர்ந்து கட்சியை நடத்துவது வேறு. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.