ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து இருப்பதாக அறிவித்து இருப்பதற்கு பா.ஜ.க எந்தவிதத்திலும் காரணம் இல்லை என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வர இருப்பதாகவும், தனிக்கட்சி ஆரம்பித்து வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் அறிவித்தார். இதனையடுத்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக அரசியலுக்கு வருவது குறித்து முடிவு எடுக்காமல் இருந்த ரஜினி இப்போது முடிவெடுத்து இருக்க காரணம் பிண்ணனியில் பாஜக அவரை இயக்குவது தான் என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ரஜினி அரசியலுக்கு வருவது அவரது சொந்த முடிவு. இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ரஜினியை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. இப்படித்தான் அதிமுக ஆட்சியை பின்னால் இருந்து நாங்கள் இயக்குகிறோம் என்றார்கள், மோடி கருணாநிதியை சந்தித்த போது திட்டமிட்டு கூட்டணிக்கான சந்திப்பு என்று அதைப்பற்றி பேசினார்கள், இப்போது ரஜினியை இயக்குகிறோம் என்று விமர்சிக்கிறார்கள். சமீபகாலமாக பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து எங்களுக்கு எதிராக அரசியல் செய்பவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் எல்லாவற்றிலும் எங்களை குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், இந்த வீண்பழிக்கு எல்லாம் பாஜக அஞ்சாது. ஊழல் எதிர்ப்பு, ஆன்மீக அரசியல் இரண்டும் தனது கொள்கை என்று ரஜினி குறிப்பிட்டு உள்ளார். நாங்களும் அதைத்தான் பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். அதனால் அவரை அரசியல் களத்தில் வரவேற்கிறோம் என்பது மட்டும் தான் இங்கு உண்மை. ஆன்மீகம், மதவாதம் இரண்டும் வேறு வேறு. ஆனால், நாங்கள் எதோ திட்டமிட்டு மதவாதத்தை வளர்ப்பது போல சிலர் பேசி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. எது நடந்தாலும் பாஜக மீது பழி போட்டு வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்று சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள் என்றார்.