அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் கோமாளி படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
டிரைலரைப் பார்க்கும் போது ஒரு சுவாரசியமான படமாக இருக்கும் என எதிர்பார்ப்பு வருகிறது. 16 வருடங்களாக கோமாவில் இருந்த ஒருவன் கண் விழித்த பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. அதை நகைச்சுவையாகவும், ஆக்ஷனுடனும், உணர்வுபூர்வமாகவும் கொடுக்க உள்ளார்கள் எனத் தெரிகிறது.
ஜெயம் ரவி, சம்யுக்தா இடையிலான பள்ளி காதல் காட்சிகள், ஜெயம் ரவி, யோகி பாபு மற்றும் அபார்ட்மென்ட் குழந்தைகளின் காமெடி, கேஎஸ் ரவிக்குமாரின் வில்லத்தனம், ஹிப்ஹாப் தமிழாவின் பாடல்கள் என ஒரு பக்கா கமர்ஷியல் படமாக இந்தப் படம் ரசிகர்களைக் கவர முயற்சிக்கலாம்.
படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சில குறும்படங்களை மட்டுமே இயக்கிய அனுபவம் உள்ளவராம். யாரிடமும் உதவி இயக்குனராகவும் இருந்த அனுபவமில்லையாம். 23 வயதில் தயாரிப்பாளரிடம் கதையைச் சொல்லி 26 வயதில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். அவரைப் பார்த்தால் கல்லூரி மாணவர் போலத்தான் இருக்கிறார்.
கோமாளி டிரைலரில் ஆரம்பம் முதல் கடைசி வரை உள்ள சுவாரசியம் படத்தின் கிளைமாக்ஸ் போல டிரைலரின் கிளைமாக்சிலும் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சு ஒன்றினால் சரியாக இடம் பெற்று கலகலக்க வைக்கிறது.