யூ டியூப் வலையெளியில் காட்சிகளை பார்த்து இராணுவ சினைப்பர் துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தும் துப்பாக்கியை போன்ற நான்கடி நீளமான துப்பாக்கியை வடிவமைத்த ஒருவரை தாம் இன்று கைது செய்ததாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீசப்பட்ட பொருட்களை பயன்படுத்தி துப்பாக்கியை தயாரித்த இளைஞன்
வாத்துவ-தல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், ஒரு காலத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்து, புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்று திரும்பியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக், வெள்ளை இரும்பு, ஸ்பிரிங், அலுமனிய குழாய்கள் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த துப்பாக்கியை அவர் தயாரித்துள்ளார். பிளாஷ்டிக் மற்றும் குவிவு வில்லைகளை பயன்படுத்தி தூரம் பார்க்கும் கருவியை தயாரித்துள்ளார்.
துப்பாக்கியை பயன்படுத்தி விலங்குகளை கொன்றேன்-சந்தேக நபர் வாக்குமூலம்
துப்பாக்கிக்கான தோட்டக்களாக சிறிய இரும்பு உருளைகளை பயன்படுத்தி பூனை, நாய் மற்றும் பறவைகளை தாக்கியிருப்பதாகவும் தாக்குதலுக்கு உள்ளான இந்த உயிரினங்கள் அதே இடத்தில் விழுந்து இறந்து போனதாகவும் சந்தேக நபர், பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இரும்பு உருளைகளுக்கு பதிலாக வேறு ஒரு பொருளை பயன்படுத்துவதற்கான சோதனை முயற்சிக்காக துப்பாக்கி துண்டுகளாக கழற்றி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை கைப்பற்றியதாகவும் வாத்துவ பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.