யூரோ கிண்ணம்: இறுதி போட்டிக்குள் நுழைந்தது போர்த்துகல்
யூரோ கிண்ணம் கால்பந்து போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் வேல்ஸ் அணியை துவம்சம் செய்த போர்த்துகல் இறுதி போட்டிக்கு அதிரடியாக நுழைந்துள்ளது.
யூரோ கிண்ண கால்பந்து போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் போத்துகல் அணி, கிண்ணத்தை வெல்லும் நோக்கில் ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக விளையாட தொடங்கியது.
இதற்கு சற்றும் சளைக்காமல் வேல்ஸ் அணியும் ஆடவே ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.
ஆனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்காமல் சம நிலையில் மல்லுக்கட்டவே ஆட்டம் விறுவிறுப்பின் உச்சத்தை தொட்டது.
போர்த்துகல் அணி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வரவே, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 50-வது நிமிடத்தில் அந்த வாய்ப்பு ரொனால்டோ வடிவில் வாய்த்தது போர்த்துகல் அணிக்கு.
தலையால் முட்டி எழுப்பிய பந்து சரியாக கோல் வளையத்திற்குள் சென்று சேரவே போர்த்துகல் அணி தங்களது முதல் கோலை பதிவு செய்தனர்.
இதற்கு சற்றும் சளைக்காமல் போராடிய வேல்ஸ் அணி பல முறை முயன்றும் கோல் கணக்கை துவங்க முடியாமல் ஆட்டத்தின் போக்கை தங்கள் பக்கம் நிலை நாட்ட தவறினர்.
இதனால் போர்த்துகல் அணி நானி வடிவில் அடுத்த கோலை 53வது நிமிடத்தில் அடித்து யூரோ கிண்ணத்தின் இறுதி போட்டிக்கு தெரிவு பெற்றது.