யூரோ கிண்ணம்: இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி.. முதன்முறையாக காலிறுதியில் ஐஸ்லாந்து.
15வது ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதன் 2வது சுற்று போட்டியின் கடைசி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து- ஐஸ்லாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.
போட்டியின் 4வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு நட்சத்திர வீரர் வெய்ன் ரூனி பெனால்டி மூலம் கோலை அடித்தார்.
பின்னர் 6வது நிமிடத்திலேயே ஐஸ்லாந்து பதில் கோல் அடித்து சமன் செய்தது. ரேக்னர் சிகுர்சன் இந்த கோலை அடித்தார்.
இதைத் தொடர்ந்து 18வது நிமிடத்தில் ஐஸ்லாந்து மேலும் ஒரு கோலை அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது.
ஐஸ்லாந்து அணியின் கோல்பின் சிக்போர்சன் இந்த கோலை அடித்தார். போட்டியின் இறுதி வரை இங்கிலாந்து அணியால் மேலும் கோல் எதுவும் போட முடியவில்லை.
இறுதியில் ஐஸ்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக காலிறுதிக்கு முன்னேறியது.
இங்கிலாந்து அணியின் இந்த தோல்வியால் பயிற்சியாளர் ராய் ஹட்சன் பதவி விலகினார். அடுத்த மாதம் 3ம் திகதி நடக்கும் காலிறுதிப் போட்டியில் ஐஸ்லாந்து அணி பிரான்சை சந்திக்கிறது.