டிஜிட்டல் காலத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்று மற்றவர்கள் பேசிக் கொள்வதை விட, பேஸ்புக், டுவிட்டர் பதிவில் எத்தனை லைக் கிடைத்தது, எத்தனை ரிடுவீட் கிடைத்தது, எத்தனை கமெண்ட் கிடைத்தது என்றுதான் எல்லோரும் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
திரையுலகத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு இப்போது ‘டிரென்டிங், வியூஸ்’ ஆகிய இரண்டும் தான் மிக முக்கியமாக இருக்கிறது. அது படத்தின் வெற்றிக்கும், வசூலுக்கும் எந்த அளவிற்கு பயன்படுகிறது என்பது பற்றியெல்லாம் கவலையில்லை. பரபரப்பை ஏற்படுத்துகிறதா என்று மட்டும் தான் பார்க்கிறார்கள்.
அந்த விதத்தில் யு டியூபில் யார் படங்களுடைய டிரைலர்கள், டீசர்கள், பாடல்கள் ஆகியவற்றிற்கு பார்வைகள் அதிகம் கிடைக்கிறதோ அவர்கள்தான் மிகப் பிரபலமானவர்களாக இருக்கிறார்கள்.
யு டியூபைப் பொறுத்தவரையில் டீசர் சாதனையில் நம்பர் 1 இடத்தில் இருப்பது விஜய்தான். அவருடைய ‘மெர்சல்’ டீசர் தான் அதிகப் பார்வைகள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. லைக்குகுள் விஷயத்திலும் அந்த டீசர்தான் முதலிடத்தில் இருக்கிறது.
அடுத்து ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் யு டியூபில் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. மிகவும் குறுகிய காலத்தில் அந்த வீடியோ பாடல் 2 கோடி பார்வைகளைக் கடந்து, 2 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது. அதற்கு முன் வெளியான ‘லிரிக் வீடியோ’ 3 கோடியே 92 லட்சம் பார்வைகளைக் கடந்து 4 கோடியை நெருங்க உள்ளது. இரண்டையும் சேர்த்தால் ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் 5 கோடியே 92 லட்சம் பார்வைகளைப் பெற்று தனி சாதனை புரிந்துள்ளது.
விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த படங்களின் பாடல்களில் ‘கத்தி’ படத்தின் ‘செல்பி புள்ள’ வீடியோ பாடல்தான் 3 கோடியே 48 லட்சம் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. இப்போது ‘மெர்சல்’ படத்தின் பாடல் வீடியோ, லிரிக் வீடியோ இரண்டும் சேர்ந்து 6 கோடியை நெருங்க உள்ளது. விஜய்யின் நம்பர் 1 பாடலாக இப்போது ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப் போறான் தமிழன்…’ மாறியுள்ளது.
அதே சமயம் விஜய்யின் போட்டியாளரான அஜித்தின் ‘ஆளுமா டோலுமா’ வீடியோ பாடல் 3 கோடியே 38 லட்சம் பார்வைகளுடனும், லிரிக் வீடியோ 1 கோடியே 72 லட்சம் பார்வைகளையும் இதுவரை பெற்றுள்ளது. இரண்டும் சேர்த்து 5 கோடியே 10 லட்சம் பார்வைகளில் இருக்கிறது.
விஜய், அஜித் இருவரது பாடல்கள்தான் யு டியூபில் சாதனை படைத்திருக்கும் என்று நினைத்தால் அது தவறு. அவர்கள் இருவரையும் விட சில வருடங்களுக்கு முன்பே வீடியோ பாடலில் தனி சாதனை படைத்துவிட்டார் தனுஷ். கூடவே சிம்புவும் சாதனை படைத்துள்ளார்.
தனுஷ் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்த ‘ மாரி’ படத்தின் ‘டானு டானு’ பாடலின் வீடியோ 4 கோடியே 83 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அதன் லிரிக் வீடியோ 1 கோடியே 44 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இரண்டும் சேர்ந்து 6 கோடியே 28 லட்சம் பார்வைகளுடன் உள்ளது. வீடியோ பாடல்களில் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ளது இந்தப் பாடல்.
தமிழ் சினிமா என்றாலே ரஜினிகாந்த் பற்றி இல்லாமலா…ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘கபாலி’ படத்தின் ‘நெருப்புடா..’ பாடல் யு டியூபில் புயலைக் கிளப்பியது. இருந்தாலும் அப்பாடலின் லிரிக் வீடியோ இதுவரை 3 கோடியே 15 லட்சம் பார்வைகளையும், அதன் வீடியோ பாடல் 99 லட்சம் பார்வைகளையும் மட்டுமே பெற்றுள்ளது.
தமிழ் நடிகர்களின் யு டியூப் வீடியோ பாடலைப் பொறுத்தவரையில் தனுஷ் தான் முதலிடத்தில் உள்ளார். அந்தப் பெருமையை ‘மாரி’ படத்தின் ‘டானு டானு’ வீடியோ பாடல் அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. அனிருத் இசையமைப்பில், தனுஷ் எழுதி அனிருத் பாடிய பாடல். வீடியோ பாடல், லிரிக் வீடியோ இரண்டும் சேர்த்து 6 கோடியே 28 லட்சம்.
இரண்டாவது இடத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விவேக் எழுதி கைலாஷ் கேர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா எ.வி ஆகியோர் பாடிய பாடல். இப்பாடலின் லிரிக் வீடியோ, வீடியோ பாடல் இரண்டும் சேர்த்து 5 கோடியே 92 லட்சம்.
மூன்றாவது இடத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘தள்ளிப் போகாதே’ பாடலின் வீடியோ 2 கோடியே 72 லட்சம் பார்வைகளையும், லிரிக் வீடியோ 2 கோடியே 90 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளன. மொத்தமாக 5 கோடியே 62 லட்சம் பார்வைகள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் தாமரை எழுதி சித் ஸ்ரீராம், அபர்ணா நாராயணன், ஏடிகே பாடிய பாடல் இது.
ஒரு திரைப்பத்தின் வீடியோ பாடல், லிரிக் வீடியோ இரண்டையும் சேர்த்து கணக்கிட்டதன் அடிப்படையில்தான் மேலே குறிப்பிட்ட முதல் மூன்று இடத்தில் உள்ள பாடல்கள். வீடியோ பாடல் மட்டும் என்று கணக்கில் எடுத்தால் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த ‘ரஜினி முருகன்’ படப் பாடலான ‘உம் மேல ஒரு கண்ணு’ பாடல் 4 கோடியே 41 லட்சம் பார்வைகளைப் பெற்று வீடியோ பாடலில் ‘மாரி’ படத்தின் ‘டானு டானு’ பாடலுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.
ஆனால், யு டியூபை இப்படியும் படங்களின் விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று 6 வருடங்களுக்கு முன்பு அனைவருக்கும் புரிய வைத்த ‘ஒய் திஸ் கொல வெறி’ பாடல் இதுவரை 14 கோடி பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. திரைப்படப் பாடலாக வருவதற்கு முன்பே ஒரு ஆல்பம் போல யு டியூபில் வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய பாடல் இது.
இந்தப் பாடலை கணக்கில் எடுத்தாலும், எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட வீடியோ மற்றும் லிரிக் பாடல் வகையில், ‘மாரி’ படத்தின் ‘டானு டானு’ பாடல் மூலம் விஜய், அஜித், ரஜினிகாந்தை விட யு டியூப் தமிழ்ப்படப் பாடலில் தனுஷ் தான் முதலிடத்தில் உள்ளார்.