தனது தற்கொலைக்கு சட்டத்தரணி ஒருவரே காரணமென கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு, யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா என்ற யுவதியே தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று யாழ். மருதடியிலுள்ள தனது நண்பியின் இல்லத்திற்கு சென்று, யாரும் வீட்டில் இல்லாத வேளையில் இவர் தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த யுவதி தற்கொலை செய்வதற்கு முன்னர் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில், யாழ் மாவட்ட விழிப்புலனற்றவர் சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமாக செயற்படுபவரே தனது தற்கொலைக்கு காரணமென குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு ஊழல் தொடர்பான விடயங்களில் குறித்த சட்டத்தரணி தன்னை கட்டாயப்படுத்தி வந்ததுடன், பெரும் தொகையான பணத்தை தாம் திருடிவிட்டதாக தெரிவித்து தம்மை அச்சுறுத்துகின்றார் என்று எனவே தான் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்ததாகவும் யுவதி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த யுவதி கடந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போதிலும் வீட்டு சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்லவில்லை. இதனால் யாழ். மாவட்ட விழப்புலனற்றவர் சங்கத்தில் கடமையாற்றி வந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் குறித்த கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டத்தரணியிடம் யாழ். பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.