ஐக்கிய அமெரிக்காவின் ஒரிகொன் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் யுப்புன் அபேகோனைத் தொடர்ந்து நிலானி ரட்நாயக்கவும் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டும் ஓட்டப் போட்டிக்கான முதலாவது திறன்காண் போட்டியில் பங்குபற்றிய 14 வீராங்கனைகளில் இலங்கையின் நிலானி ரட்நாயக்க 13ஆவது இடத்தைப் பெற்று வெளியேறினார்.
இப் போட்டி இலங்கை நேரப்படி 16 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 11.05 மணிக்கு நடைபெற்றது.
இப் போட்டித் தூரத்தை 9 நிமிடங்கள், 54.10 செக்கன்களில் நிலானி ரட்நாயக்க நிறைவு செய்தார்.
தியகமவில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற நூற்றாண்டு விழா மெய்வல்லுநர் போட்டியில் 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியை 9 நிமிடங்கள், 40.24 செக்கன்களில் நிறைவு செய்து தேசிய சாதனை நிலைநாட்டிய நிலானி ரட்நாயக்க, ஒரிகொனில் அநத நேரத்தை விட மோசமான நேரத்தைப் பதிவுசெய்தார்.
ஒரிகொனில் நிலானி பங்குபற்றிய முதலாவது திறன்காண் போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற கஸக்ஸ்தான் விராங்கனை நோரா ஜெருட்டோ (9:01.54), எதியோப்பிய வீராங்கனை வேர்க்குஹா கெட்டாச்சியு (9:11.25), டியூனிசிய வீராங்கனை மார்வா பௌஸாயானி (9:12.14), ஐக்கிய அமெரிக்க வீராங்கனை எம்மா கோபேர்ன் (:15.19) ஆகியோர் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
3000 மீற்றர் தடைதாண்டி போட்டிக்காக நடத்தப்பட்ட மூன்று திறன்காண் போட்டிகளில் மொத்தம் 42 வீராங்கனைகள் பங்குபற்றியதுடன் ஒட்டுமொத்த நிலையில் நிலானி ரட்நாயக்க 39ஆவது இடத்தைப் பெற்றார்.
இந்த மூன்று தகுதிகாண் போட்டிகளில் ஒவ்வொன்றிலும் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களும் ஒட்டமொத்த போட்டிகளில் அதிசிறந்த நேரப் பெறுதியைக்கொண்ட 6 வீராங்கனைகளுமாக 15 வீராங்கனைகள் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.
இதேவேளை, உலக மெய்வல்லநர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றும் 3ஆவது இலங்கையரான கயன்திகா அபேரட்ன, 800 மீற்றர் திறன்காண் போட்டியில் இலங்கை நேரப்படி எதிர்வரும் 22ஆம் திகதி அதிகாலை 5.40 மணிக்கு பங்குபற்றவுள்ளார்.