உள்நாட்டு யுத்தத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் தேசிய பொறிமுறையின் ஊடாக தீர்வினைப் பெற முடியும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தியுள்ளோம்.
இதற்கான வாய்ப்புக்கள் எமக்கு வழங்கப்பட வேண்டும் என்பதோடு , நீதியை நிலைநாட்டுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்பதையும் ஐ.நா.வில் சுட்டிக்காட்டியுள்ளதாக நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போது கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இலங்கையின் உள்ளக சட்ட பொறிமையின் கீழ் நீதியை நிலைநாட்ட முடியும் என்பதை ஐ.நா.வில் வலியுறுத்தியுள்ளோம். எந்தவொரு நாடாக இருந்தாலும் 30 ஆண்டு கால பாரிய யுத்தத்தினை எதிர்கொள்ளும் போது ஒரு தரப்பினர் மாத்திரமின்றி சகல மக்களும் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும்.
நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இதனால் பாதிக்கப்பட்டனர் என்பதை தரவுகளுடன் நாம் மீண்டும் மீண்டும் அவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளோம்.
வடக்கில் குண்டுகள் வெடித்தன, கிழக்கில் முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்டனர், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்பத்தி யுத்தம் செய்தனர். இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு பல விடயங்கள் இடம்பெற்றமையை நாம் இதன் போது தெளிவுபடுத்தினோம். அத்தோடு இது ஒரு தரப்பினரை மாத்திரம் இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்ட யுத்தம் அல்ல என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஓரிருவர் மாத்திரம் இணைந்து முன்னெடுத்த சாதாரணமானதொரு செயற்பாடல்ல. வழமையாக முன்னெடுக்கப்படும் பாரிய யுத்தமொன்று சமாந்தரமானதாகும்.
நிலப்பரபுக்களை நிர்வகித்து, காலாட்படைகளையும் , கப்பல்களையும் கொண்ட மிகப் பலம்வாய்ந்த ஒரு அமைப்பிற்கு எதிராகவே எமக்கு யுத்தத்தை முன்னெடுக்க வேண்டியேற்பட்டது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதன் பிரதிதபலன் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது.
தமிழ் மக்களுக்கும் இதன் பயன் கிடைத்துள்ளமையை தெரியப்படுத்தினோம். யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு, தெற்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றன.
நீண்ட காலமாக திருத்தங்களுக்கு உட்படுத்தப்படாமலிருந்த பயங்கரவாத தடை சட்டத்தில் முற்போக்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கு பொறுத்தமற்றவர் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக இந்த ஆலோசனை குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் மூலம் நியாயத்தை வழங்க எம்மால் முடிந்துள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நேரடியாக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட வேண்டுமே தவிர , ஊடகவியலாளர்கள் அல்ல என்பதை ஜனாதிபதி அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.
அதனை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய பொலிஸ் மா அதிபர் கடந்த செப்டெம்பர் முதல் விசேட சுற்று நிரூபமொன்றையும் வெளியிட்டுள்ளார்.
இவை அனைத்தின் ஊடாகவும் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண முடியும் என்பதை நாம் அவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளோம்.
இது தவிர வழக்கு விசாரணைகளையும் முறையாக முன்னெடுத்து வருகின்றோம். கடந்த காலங்களில் மாங்குளம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் புதிய நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் முதன் முறையாக உயர்நீதிமன்ற நீதியரசர் நியமிக்கப்பட்டுள்ளார். நீதவான் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தேசிய பொறிமுறையின் கீழ் உள்நாட்டு சட்ட ஏற்பாடுகளுக்கமைய தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டை ஸ்திரமாக தெரிவித்துள்ளோம்.
இது தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், சமாதானம் மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்டவையும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய தேசிய பொறிமுறையின் கீழ் உள்ளக விவகாரங்களுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்பதை தெளிவாகத் தெரிவித்துள்ளோம். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்பதையும் குறிப்பிட்டுள்ளோம் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]