யுத்தத்தின்போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை. இராணுவத்திற்கு எதிராக சாட்சியமளித்தவர்கள் 99.9 வீதமானவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள். ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் யுத்தத்தை நிறைவு செய்த இராணுவத் தளபதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடவும் அதிகளவிலான வாக்குகளை வழங்கினர். அதனால் மிச்சேல் பச்லெட்டுக்கு நாங்கள் பயமில்லை. அவரின் அறிக்கையை நாங்கள் கண்டுகொள்ளமாட்டோம் என பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நெருக்கடி, ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டுவந்திருந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. முதலில் போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தினரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக முகம்கொடுக்க வேண்டும். அதனை செய்யாமல் ஒளிந்துகொண்டு இருப்பது சரிவராது. தவறு செய்தவர் ஒருவரேனும் இருந்தாலும் அவருக்கு நிச்சயமாக தேச மட்டத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்காமையினால் சட்டப்படி யுத்தத்தை முன்னெடுத்தவர்களுக்கும் பொருத்தமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது. அதிகமான குற்றச்சாட்டுகள் முன்னணியில் இருந்த இராணுவத்தினருக்கு அன்றி பின்னால் இருந்து பல்வேறு செயற்பாடுகளில் இருந்தவர்கள் மீதே சுமத்தப்படுகின்றது.
இந்நிலையில் எக்னலிகொடவின் மனைவிக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதில் யார் குற்றவாளி என்று சாட்சிகள் வெளியாகியிருந்தன. அத்துடன் செஹான் மாலக மற்றும் சிரில் காமினி ஆயர் ஆகியோருக்கு அடிக்கடி இடையுறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றை பார்க்கும் போது மனித உரிமைகள் நிச்சயமாக மீறப்படுகின்றன. மீறப்படவில்லை என்று கூச்சலிட்டு பலனில்லை. உலகத்தின் முன்னால் மனித உரிமைகள் மீறப்படுவதாக நாங்கள் காட்டுகின்றோம்.
அத்துடன் ஊடகவியலாளர் சமுதித்தவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இது யாருடைய வேலை என்று எங்களுக்கு தெரியும். அவருக்கு இந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாவிட்டாலும் எதிர்காலத்தில் நாங்கள் அதனை செயற்படுத்துவோம். சமுதித்த மீதான தாக்குதல் தொடர்பில் கதைப்பது ஜெனிவாவை மகிழ்விக்க என்றால், அதற்கு முன்னர் சமுதித்த மீது தாக்குதல் நடத்திய நபரும் ஜெனிவாவுக்கு ஒத்துழைக்க தாக்குதல் நடத்தியிருக்கலாம். இவ்வாறான செயற்பாடுகளால் இராணுவத்தினரே பாதிப்புக்கு உள்ளாகுவார்கள்.
நாங்கள் மிச்சேல் பச்லெட்டுக்கு பயமில்லை. அவர் ஆயிரக் கணக்கானோரிடம் சாட்சியங்களை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இராணுவத்திற்கு எதிராக சாட்சியமளித்தவர்கள் 99.9 வீதமானவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று அவருக்கு நாங்கள் ஞாபகப்படுத்துகின்றோம். இராணுவத்தினர் தமது உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கி விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட மக்களை பாதுகாத்தனர் என்பது அவருக்கு தெரியாது.
யுத்தத்தின்போது தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ததாக கூறுவது பெரும் பொய்யாகும். யுத்தம் முடிந்து ஒருவருடமாகுவதற்கும் முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் யுத்தத்தை நிறைவு செய்த இராணுவத் தளபதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடவும் அதிகளவிலான வாக்குகளை வழங்கினர். இதன்மூலம் யுத்தத்தின்போது தமிழ் மக்களை இராணுவத்தினர் கொன்று குவித்தனர் என தெரிவிப்பதை தமிழ் மக்கள் நம்பவில்லை என்றே தெரிகின்றது.
யுத்தக் களத்தில் அனைத்து இராணுவ உறுப்பினர்களும் ஜெனிவா பிரகடனத்திற்கமையவே செயற்பட்டனர். சர்வதேச சட்டங்களுக்கமையவே யுத்தம் செய்தனர். பின்னால் இருந்த ஒருவர், இருவர் குற்றம் செய்தனரா என்ற சந்தேகம் அந்தக் காலத்தில் எனக்கும் சந்தேகம் இருந்தது. அது தொடர்பில் தேடிப் பார்க்கலாம். அது தொடர்பில் ஆராய்ந்து இராணுவத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுத்து அவர்களின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும்
அத்துடன் மிச்சேல் பச்லெட்டுக்கு நான் தெரிவிப்பது, அம்மையாரே விடுதலைப்புலிகள் மிகவும் கொடூரமானவர்கள். அவர்கள் சிங்கள தமிழ், முஸ்லிம் மக்கள் என பாகுபாடு இல்லாமல் அப்பாவி பொது மக்களை கொன்றனர். இந்திய பிரதரை கொலை செய்தனர். மனித வெடிகுண்டுகளாக தங்களை மாற்றி தமிழ் அரசியல்வாதிகள் உட்பட அரசியல்வாதிகளை கொன்றனர். பெண்கள், சிறுவர்கள் கர்ப்பினி தாய்மார் எனபலரையும் கொன்றனர். வர்த்தக மையங்களை அழித்தனர்.
மிச்சேல் அம்மையாரே நீங்கள் ஒருபக்க கருத்துக்களையே கேட்கின்றீர்கள். அவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது விடுதலை புலிகளை பிரதிநிதித்துவப்படுத்திய நபர்கள். அதனால் நாங்கள் உங்களிடம் கேட்பது எமது பக்க நிதியை பெற்றுக்கொடுக்கவேண்டும். விடுதலைப்புலிகளை இல்லாதொழித்தது தொடர்பில் நீங்கள் கோபப்படுகிறீர்களா என கேட்கின்றேன் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]