யுக்திய வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு மேல்மாகாண பதில் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இடம்பெற்றது.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் குற்றச்செயல்களை ஒடுக்கும் யுக்திய விசேட பொலிஸ் வேலைத்திட்டம் கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விசேட சுற்றிவளைப்புகளுக்கு அமைய இதுவரையில் நாடளாவிய ரீதியில் 22 ஆயிரத்துக்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த நடவடிக்கை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்று நேற்று காலை பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் மேல்மாகாண பதில் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதனிடையே யுக்திய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் தரப்பினர் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு 0718598800 எனும் புதிய தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் குறித்த தொலைபேசி இலக்கங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிகர்களும் முச்சக்கர வண்டிகளில் ஒட்டபட்டன.
இதேவேளை குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்கள் வழங்கும் தரப்பினரின் தனிப்பட்ட தகவல்கள் எவையும் வெளிப்படுத்தப்படமாட்டாது என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இதன்போது தெரிவித்தார்.