யாழ் மாநகரமுதல்வருக்கும் – இலங்கைக்கான பின்லாந்துநாட்டின் அரச உயர்ஸ்தானிகர் ஹரி காமாராயினன் தலைமையிலான குழுவினருக்குமிடையில் விசேடசந்திப்பு ஒன்று கடந்த 4 ஆம் திகதி மாநகரமுதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
மேற்படிசந்திப்பில் யாழ் மாநகரத்தின் தற்போதைய நிலை மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், அபிவிருத்தித் திட்டங்களை அனைத்துத்தரப்பினரையும் இணைத்துக் கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் முதல்வர் உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினருக்கு விளக்கியிருந்தார்.
மேலும் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழ் பேசும் மக்களின் நிலை,மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடவாழ்வியல் பிரச்சினைகள், இலங்கையின் தற்போதையஅரசியல் நடவடிக்கைகள் மற்றும் அரசியல் தீர்வு முயற்சிகள் ,தீர்வுமுயற்சிகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் கலந்துகொண்டிருந்த உயர்ஸ்தானிகரிடம் தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி சந்திப்பின் இறுதியில் அரசியல் தீர்வு விடயத்தில் தாங்களும் தங்கள் நாட்டின் சார்பில் காத்திரமானஅழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் மாநகர த்தின் அபிவிருத்தி சார் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தங்களது ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்களும் எதிர்காலத்தில் தொடர்ந்தும் காணப்பட வேண்டும் என்றும் பின்லாந்து நாட்டின் உயர்ஸ்தானிகரிடம் முதல்வர் அவர்கள் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.