யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் குடும்பப்பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தை செய்த இளைஞன் ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
காசுக் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் குடும்பப்பெண்ணை அடித்துக் கொலை செய்து புதைப்பதற்கு இளைஞனின் தாயின் சகோதரி தூண்டியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 2ஆம் திகதி காணாமற்போன குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கடந்த வாரம் மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தைச் சேர்ந்த பி.யசிந்தா (வயது-44) என்பவரே கொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் சடலம் மீட்கப்பட்ட வீட்டில் வசித்த கணவன், மனைவி மற்றும் அவர்களது உறவுமுறையான 20 வயதுடைய இளைஞன் ஆகிய மூவர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் மற்றும் நிபுணத்துவ விசாரணைகளில் இந்தக் கொலை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் வருமாறு;
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குடும்பத்துக்கு கடற்தொழில் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக மாதம் 25 சதவீத மீற்றர் வட்டிக்கு 3 இலட்சம் ரூபாய் மீளச் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொல்லப்பட்ட பெண் வழங்கியுள்ளார்.
அந்தப் பணம் மீள வசூலிப்பதற்காக குடும்பப் பெண் பல தடவைகள் அவர்களது வீட்டுக்குச் சென்றுள்ளார். எனினும் பணத்தை உரிய தவணையில் செலுத்துமாறு அவர்கள் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் வட்டிக்கு பணம் வழங்கிய பெண்ணை கொலை செய்ய பணம் வாங்கிய பெண், தனது சகோதரியின் மகனுடன் திட்டமிட்டுள்ளார். அதற்காக இளைஞனுக்கு ஹெரோயின் வாங்குவதற்கு பணம் வழங்கியுள்ளார்.
கடந்த மார்ச் 2ஆம் திகதி அந்த வீட்டுக்கு பணத்தை வசூலிக்க பெண் சென்றுள்ளார். அங்கு குடும்பத்தலைவர் கடற்தொழிலுக்குச் சென்ற நிலையில் அவரது மனைவியும் மனைவியின் சகோதரியின் மகனும் இருந்துள்ளனர்.
பணம் கேட்டுச் சென்ற குடும்பப்பெண்ணின் தலையில் இளைஞன் இரண்டு தடவைகள் மொட்டையான ஆயுதத்தினால் தாக்கியுள்ளார். அதனால் அந்தப் பெண் சரிந்து நிலத்தில் வீழ்ந்துள்ளார். அதன் பின்னர் சிறிய தாயாரும் இளைஞனும் சேர்ந்து தலைணையை முகத்தில் அமத்தி பெண்ணை கொலை செய்துள்ளனர்.
கடற்தொழிலுக்குச் சென்று வீடு திரும்பிய குடும்பத்தலைவர் வீட்டுக்குள் கொல்லப்பட்ட பெண்ணின் சடலத்தைக் கண்டு முரண்பட்டுள்ளார். அதனையடுத்து வீட்டு வளாகத்துக்குள் பள்ளம் தோண்டி பெண்ணின் சடலத்தைப் புதைத்துள்ளனர்.
எனினும் கொல்லப்பட்ட பெண் பயணித்த மோட்டார் சைக்கிள் வீட்டு வளாகத்துக்குள் நின்றுள்ளது. மறுநாள் அதனைப் புதைப்பதற்கு தொழிலாளி ஒருவரை அழைத்து குப்பை கொட்டுவதற்கு என பள்ளம் தோண்டியுள்ளனர். அதற்குள் மோட்டார் சைக்கிளைப் புதைத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே இளைஞனுக்கு ஹெரோயின் வாங்க பணம் கொடுக்க அவரது சிறிய தாயார் சில நாள்களாக மறுத்துவந்துள்ளார். அதனால் மற்றொரு வட்டிக்கொடுக்கும் நபரிடம் சென்ற இளைஞன், “வட்டி அக்காவை கொலை செய்து புதைத்துள்ளேன், பணம் தராவிடின் யாரையும் அப்பிடிதான் செய்வேன்” என்று கூறியுள்ளார்.
இளைஞன் போதையில் அலம்புவதாக அந்த நபர் விட்டுள்ளார். எனினும் காணாமற்போன பெண் தொடர்பில் பேசப்பட்டதனால் இளைஞன் தன்னிடம் கூறியதை அந்த நபர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
அதனையடுத்தே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். கணவன், மனைவி மற்றும் உறவுமுறை இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததன் அடிப்படையில் அவர்களது வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் மற்றும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]