அகில இலங்கை டென்னிஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி நடத்தும் பாடசாலை மாணவர்களுக்கிடையேயான 14 வயதுக்கும், 18 வயதுக்கும் கீழ்ப்பட்ட ஆண் – பெண் தனிநபர் பங்குபற்றும் தேசிய தரப்படுத்தல் மட்டத்திலான டென்னிஸ் போட்டி முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 28, 29, 30ஆம் திகதிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி, பரியோவான் கல்லூரி டென்னிஸ் திடல்களில் நடைபெற்று வருகிறது.
கொழும்பு, குருநாகல், மட்டக்களப்பு, கிளிநொச்சி போன்ற பல மாவட்டங்களில் இருந்து வருகை தரும் மாணவர்களுடன் யாழ்ப்பாணத்தில் பல பாடசாலை மாணவர்கள் இணைந்து இப்போட்டியில் விளையாடுகின்றனர்.
இந்நிலையில், கொழும்புக்கு சென்று போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் வாய்ப்புகளை தவறவிட்டுள்ளதாக கருதும் வட மாகாணத்தை சேர்ந்த பல டென்னிஸ் வீரர்களுக்கு இந்த போட்டி ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது.
இதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் டென்னிஸ் விளையாட்டுத்துறை மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், 175ஆவது ஆண்டை நோக்கி நகரும் புனித பத்திரிசியார் கல்லூரியின் டென்னிஸ் போட்டி வரலாற்றில் இது ஒரு படிக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.













