யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 3 ஆம் 4 ஆம் வருட கலைப்பீட மாணவர்கள் நேற்று இரவும் கைகலப்பில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் இந்த வருடங்களைச் சேர்ந்த மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். அதில் 5 மாணவர்கள் படுகாயமடைந்தனர். மோதலை அடுத்து அந்த இரண்டு வருடங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் மறுஅறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டன.
இந்த வார ஆரம்பத்தில் குறித்த இரண்டு வருடங்களையும் சேர்ந்த மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கக் கோரி முதலாம் இரண்டாம் வருடங்களின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று கூறப்பட்டது. நேற்று 3ஆம் 4 ஆம் வருடங்களின் மாணவர்களுக்குக் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தநிலையில் அவர்கள் நேற்றும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. தடிகளைக் கொண்டு கைகலப்பில் ஈடுபட்டனர் என்றும் சிலர் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு சென்றுள்ளனர். பின்னர் பொலிஸாரும் குவிந்தனர்.மாணவர்களின் கைகலப்பால் பொலிஸார் அங்கு நீண்டநேரம் கடமையில் இருக்க வேண்டியிருந்தது என்று தெரிவிக்கப்பட்டது. பரமேஸ்வராச் சந்தியை அண்மித்த இடங்களில் கைகலப்புக்கள் நடந்துள்ளன.அதேவேளை, இந்த வார ஆரம்பத்தில் முதலாம் இரண்டாம் வருடங்களின் மாணவர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர்.