யாழ்.மாவட்டத்தில் நேற்றுக் காலை முதல் பரவலாக அடை மழைபெய்த நிலையில் வடமராட்சி பருத்தித்துறை கடலில் காலை 9.30 மணியளவில் மேகம் கீழிறங்கி வந்து கடல் நீரை எடுக்கும் அரிய காட்சி பதிவானது.
இது ரொனாடோ எனப்படும் ஒருவகைச் சுழல் காற்றாகும். மிகவும் நீளமாகக் காட்சியளித்த இந்த இயற்கை நிகழ்வானது சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
குறித்த காட்சி வடமராட்சி மக்களை மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 15ஆம் திகதி யாழ்.பண்ணைக் கடற்பரப்பில் இது போன்ற மிகவும் நீளமான சுழல்காற்று உருவாகிய நிலையில் யாழ்.மக்களுக்கு அப்போது இதுவொரு புதுவித அனுபவமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.